வர வர அக்ஸர் படேலின் பேட்டிங் வேற லெவல்ல இருக்கு.. அதிரடியால் எதிரணியை அல்லு தெறிக்கவிட்ட அக்ஸர்

By karthikeyan VFirst Published Nov 2, 2019, 1:02 PM IST
Highlights

தியோதர் டிராபி தொடரில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணி, இந்தியா பி அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. 
 

பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணிக்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணிக்கும் இடையேயான போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணி முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவரில் 280 ரன்களை குவித்தது. 

இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் அன்மோல்ப்ரீத் சிங்கும் இறங்கினர். மயன்க் அகர்வாலுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டதால் கில்லுடன் அன்மோல்ப்ரீத் சிங் தொடக்க வீரராக இறங்கினார். 

இந்தியா ஏ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அபாரமாக ஆடி 143 ரன்களை குவித்த ஷுப்மன் கில், இந்த போட்டியில் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து ப்ரியம் கார்க் 18 ரன்களிலும் அன்மோல்ப்ரீத் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சோபிக்கவில்லை. கடந்த போட்டியில் 29 பந்துகளில் 72 ரன்களை குவித்த சூர்யகுமார், இந்த போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். தினேஷ் கார்த்திக் 34 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா சி அணி, 126 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

31.2 ஓவரில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா சி அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் சிங் நிலைத்துநின்றார். தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுக்கு பிறகு விராட் சிங்குடன் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்தார். விராட் சிங் நிதானமாக ஆட, அக்ஸர் படேல், சீரான வேகத்தில் ஸ்கோர் செய்தார். விராட் சிங் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து அக்ஸர் படேலும் அரைசதம் அடித்தார். 

அரைசதம் அடித்த பிறகு அக்ஸர் படேலின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது. அண்மைக்காலமாகவே அபாரமாக பேட்டிங் ஆடிவரும் அக்ஸர் படேல், அந்த ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடினார் அக்ஸர் படேல். அதேபோலவே இந்த போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை பறைசாற்றும் வகையில் வெளுத்துவாங்கினார். 

அரைசதத்திற்கு பின்னர், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 40 ஓவர் முடிவில் இந்தியா சி அணி 158 ரன்கள் தான் அடித்திருந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் 122 ரன்களை குவித்தது இந்தியா சி. 41வது ஓவரில் விராட் சிங் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 42 மற்றும் 43வது ஓவர்களில் அக்ஸர் படேல் தலா ஒரு பவுண்டரி அடித்தார். 44வது ஓவரில் அக்ஸர் மற்றும் விராட் சிங் ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். 

47 ஓவர் முடிவில் இந்தியா சி அணி 234 ரன்களை எட்டியது. அதன்பின்னர் எஞ்சிய 3 ஓவர்களில் அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி எதிரணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிட்டார். ரூஷ் கலாரியா வீசிய 48வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். 49வது ஓவரில் அக்ஸர் 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. 60 பந்துகளில் 97 ரன்கள் அடித்திருந்தார் அக்ஸர். இன்னிங்ஸின் கடைசி பந்தில் அக்ஸர் சதமடிக்க, 3 ரன்கள் தேவைப்பட்டது. எனவே ஒரு பவுண்டரி அடித்தால், அக்ஸர் சதத்தை எட்டிவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் அக்ஸர் படேல் சிங்கிள் மட்டுமே அடித்ததால் 98 ரன்கள் மட்டுமே அடித்து 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 

61 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 98 ரன்களை குவித்தார் அக்ஸர் படேல். விராட் சிங் 76 ரன்களை அடித்தார். விராட் சிங்கின் பொறுப்பான நிதானமான இன்னிங்ஸ் இந்தியா சி அணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. விராட் சிங்கின் வலுவான ஒத்துழைப்பு இருந்ததால்தான் அக்ஸர் படேலால் அடித்து ஆட முடிந்தது. விராட் சிங்கும் அக்ஸர் படேலும் இணைந்து 18 ஓவர்கள் பேட்டிங் ஆடி 150 ரன்களுக்கும் மேலாக சேர்த்துக்கொடுத்து அணியின் ஸ்கோர் 280ஐ எட்ட உதவினர். 

இந்தியா பி அணி 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவருகிறது. 
 

click me!