ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன் இவருதான்.. இவங்க 2 பேரும் சேர்ந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. ஃபின்ச் புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 20, 2020, 12:11 PM IST
Highlights

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை புகழ்ந்து தள்ளியதோடு, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களையும் புகழ்ந்துள்ளார். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

இந்திய அணி அந்த படுதோல்வியிலிருந்து மீண்டு, அடுத்த 2 போட்டிகளிலும் அபாரமாக ஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் - கோலி ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் 48வது ஓவரிலேயே அடித்து எளிதாக வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி 286 ரன்கள் அடித்தது. ஃபீல்டிங்கின்போது தவான் காயமடைந்ததால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடவில்லை. அதனால் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் ராகுலும் சரியாக ஆடவில்லை. ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். 

இதுவரை பல போட்டிகளை பார்ட்னர்ஷிப் அமைத்து வென்று கொடுத்துள்ள ரோஹித் - கோலி அனுபவ ஜோடி, இந்த முறையும் தங்களது பணியை செவ்வனே செய்தது. இலக்கு கடினமானது இல்லை என்பதால், எந்தவித அவசரமும் காட்டாமல் தெளிவாகவும் நிதானமாகவும் ஆடி ஸ்கோரை உயர்த்தியது. ரோஹித் சர்மா அவ்வப்போது சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 29வது சதத்தை அடித்தார். கோலி அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 137 ரன்களை சேர்த்தனர். எந்தவித பதற்றமோ அவசரமோ இல்லாமல் அருமையாக ஆடி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவிடமிருந்து பறித்தனர். ரோஹித் சர்மா 119 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி 89 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது பேட்டிங்கையும், இந்திய ஃபாஸ்ட் பவுலர்களையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். 

இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. ஆல்டைம் டாப் 5 வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர்கள் இருவரும் இணைந்து ஆடினால் சொல்லவா வேண்டும்.. அவர்கள் இருவரும் அபாரமான வீரர்கள். தற்போதைய இந்திய அணியின் மிகப்பெரிய பலமே, நிறைய அனுபவ வீரர்களை பெற்றிருப்பதுதான். பெரிய போட்டிகளில் அனுபவ வீரர்கள் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்கின்றனர். 

ஷிகர் தவான் ஆடவேயில்லை. அப்படியிருந்தும், பேட்டிங் ஆர்டரை எந்த வகையிலும் மாற்றி ஆடக்கூடிய அளவிற்கு வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ரோஹித் சர்மா அருமையாக ஆடி சதமடித்தார். இந்திய அணியின் பெரும்பாலான ரன்களை ரோஹித்தும் கோலியுமே அடித்துவிடுகின்றனர். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வேற லெவலில் உள்ளது. அதேபோல ஃபாஸ்ட் பவுலிங்கை பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக டெத் ஓவர்களை ஷமி, சைனி, பும்ரா ஆகியோர் சிறப்பாக வீசினர் என்று ஃபின்ச் தெரிவித்தார். 
 

click me!