Australia vs England: வெற்றிக்காக போராடிய ஆஸி., விட்டுக்கொடுக்காத இங்கி.,! பரபரப்பான சிட்னி டெஸ்ட் டிரா

By karthikeyan VFirst Published Jan 9, 2022, 2:12 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா வென்றுவிட்டநிலையில், 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா கம்பேக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு சதமடித்தார். 137 ரன்களை குவித்தார் உஸ்மான் கவாஜா. ஸ்டீவ் ஸ்மித் 67 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஹாரிஸ் (38), வார்னர் (30), லபுஷேன் (28), மிட்செல் ஸ்டார்க் (34) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய 416 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் (6), ஜாக் க்ராவ்லி (18), டேவிட் மலான் (3), ஜோ ரூட் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, 36 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. 5வது விக்கெட்டுக்கு 128 ரன்களை குவித்தது. ஸ்டோக்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி சதமடித்த ஜானி பேர்ஸ்டோ, 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க் உட் 39 ரன்கள் அடித்து சிறிய கேமியோ ரோல் செய்தார். முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

122 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வீரர் உஸ்மான் கவாஜா, 2வது இன்னிங்ஸிலும் சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த உஸ்மான் கவாஜா, 2வது இன்னிங்ஸிலும் சதமடித்தார். அவர் சதமடிப்பதற்காகவே பொறுமை காத்த ஆஸ்திரேலிய அணி, சதமடித்ததும் டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 387 ரன்கள் முன்னிலை பெற, 388 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 358 ரன்களும் தேவை என்ற நிலையில், க்ராவ்லியும் ஹமீதும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஹசீப் ஹமீத் 9 ரன்னிலும், டேவிட் மலான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அதிரடியாக ஆடிய ஜாக் க்ராவ்லி அரைசதம் அடித்தார். 100 பந்தில் 77 ரன்கள் அடித்தார். ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸும் ஜானி பேர்ஸ்டோவும் நன்றாக ஆடினர். ஆனால் அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னில் ஆட்டமிழக்க, பட்லர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 41 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் உட் டக் அவுட்டானார்.

அதன்பின்னர் போட்டியை டிரா செய்ய போராடியது இங்கிலாந்து அணி. ஜாக் லீச்சும் ஸ்டூவர்ட் பிராடும் இணைண்டு 9வது விக்கெட்டுக்கு 8 ஓவர்களை சமாளித்து ஆடினர். இன்னிங்ஸின் 100வது ஓவரில் ஜாக் லீச் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஸ்டூவர்ட் பிராடும் ஆண்டர்சனும் இணைந்து கடைசி 2 ஓவர்களை அருமையாக ஆடிவிட்டனர். கடைசி விக்கெட்டை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியாததால் போட்டி டிரா ஆனது.
 

click me!