Australia vs England: சிட்னி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலும் சதமடித்த உஸ்மான் கவாஜா! இங்கிலாந்துக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jan 8, 2022, 3:05 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவாஜா, 2வது இன்னிங்ஸிலும் சதமடித்தார். இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 358 ரன்களும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவை.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா வென்றுவிட்டநிலையில், 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா கம்பேக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு சதமடித்தார். 137 ரன்களை குவித்தார் உஸ்மான் கவாஜா. ஸ்டீவ் ஸ்மித் 67 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஹாரிஸ் (38), வார்னர் (30), லபுஷேன் (28), மிட்செல் ஸ்டார்க் (34) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய 416 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் (6), ஜாக் க்ராவ்லி (18), டேவிட் மலான் (3), ஜோ ரூட் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, 36 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. 5வது விக்கெட்டுக்கு 128 ரன்களை குவித்தது. ஸ்டோக்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி சதமடித்த ஜானி பேர்ஸ்டோ, 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க் உட் 39 ரன்கள் அடித்து சிறிய கேமியோ ரோல் செய்தார். முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

122 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வீரர் உஸ்மான் கவாஜா, இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த உஸ்மான் கவாஜா, இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். அவர் சதமடிப்பதற்காகவே பொறுமை காத்த ஆஸ்திரேலிய அணி, சதமடித்ததும் டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 387 ரன்கள் முன்னிலை பெற, 388 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளான நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 358 ரன்களும் தேவை.
 

click me!