இந்திய வீரர்கள் இதை செய்தே தீரணும்.. ஹெட் கோச் ராகுல் டிராவிட்டின் முக்கியமான அட்வைஸ்

By karthikeyan VFirst Published Jan 7, 2022, 10:09 PM IST
Highlights

இந்திய வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான அறிவுரை கூறியுள்ளார்.
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் முறையாக தோல்வியை தழுவியது.

2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தீர்மானிக்கும்.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகின்றனர், எதில் கவனம் செலுத்தி மேம்பட வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “உண்மையாகவே எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறோம். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான முமெண்ட்டுகளை கைப்பற்ற வேண்டும். சில பார்ட்னர்ஷிப்புகள் அமையும்போது, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும். 

நல்ல தொடக்கம் கிடைக்கும் வீரர்கள் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும். முதல் டெஸ்ட்டில் ராகுல் சதமடித்தார்; நாங்கள் ஜெயித்தோம். 2வது போட்டியில் எல்கர் பெரிய இன்னிங்ஸ் ஆடினார்; தென்னாப்பிரிக்கா ஜெயித்தது. பேட்ஸ்மேன் பெரிய ஸ்கோர் அடிப்பதுதான், இதுமாதிரியான ஆடுகளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார் ராகுல் டிராவிட்.
 

click me!