
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 3-0 என ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், 4வது டி20 போட்டி இன்று மெல்போர்னில் நடந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். குசால் மெண்டிஸ் (27), அசலங்கா (22), குணதிலகா (17), சாமிகா கருணரத்னே (14) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 139 ரன்கள் அடித்தது இலங்கை அணி.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜெய் ரிச்சர்ட்ஸன் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ரன்னும் விட்டுக்கொடுக்காமல் விக்கெட்டும் வீழ்த்தினார் ஜெய் ரிச்சர்ட்ஸன். கேன் ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், 44 ரன்களை விட்டுக்கொடுத்தார். அஷ்டான் அகர் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பென் மெக்டெர்மோட் 9 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஃபின்ச் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரராக இறங்கிய அஷ்டான் அகர் 26 ரன்கள் அடித்தார். 49 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் மேக்ஸ்வெல்லும் ஜோஷ் இங்லிஸும் இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை குவித்தனர்.
அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஜோஷ் இங்லிஸ், 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசினார். 39 பந்தில் 48 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல், கடைசிவரை களத்தில்நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 4-0 என டி20 தொடரை வென்றுள்ளது. வரும் 20ம் தேதி நடக்கும் கடைசி டி20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியோ கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றிக்கு போராடும்.