
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொழும்புவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்ஷனா, நுவான் துசாரா.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். பதும் நிசாங்கா 36 ரன்களும், அசலங்கா 38 ரன்களும், குணதிலகா 26 ரன்களும் அடித்தனர். ஹசரங்கா 17 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவரில்16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க்கின் பவுலிங்கில் சரணடைந்த இலங்கை அணி வெறும் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
129 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இருவரும் விக்கெட்டை இழக்காமல் 14வது ஓவரிலேயே இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். ஃபின்ச் 40 பந்தில் 61 ரன்களும், வார்னர் 44 பந்தில் 70 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.