ஃபின்ச் - வார்னர் அதிரடி அரைசதம்.. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 9:34 AM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-1 என தொடரை வென்றது. 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கின்றன. இதில் முதலில் டி20 தொடர் நடந்தது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. 

இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. கேப்டவுனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வார்னர் மற்றும் ஃபின்ச்சின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 193ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 11.3 ஓவரில் 120 ரன்களை குவித்தனர். 37 பந்தில் 57 ரன்கள் அடித்து வார்னர் ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே, 37 பந்தில் 55 ரன்கள் அடித்த ஃபின்ச்சும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மேத்யூ வேட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சரியாக ஆடவில்லை. 

ஆனால், வார்னரும் ஃபின்ச்சும் அமைத்து கொடுத்த அடித்தளம் வீணாகாத வகையில், ஸ்மித் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மித் 15 பந்தில் 30 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அலெக்ஸ் கேரியும் சரியாக ஆடவில்லை. 6 பந்தில் 7 ரன்கள் மட்டுமே அடித்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. 

194 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. அதிகபட்சமாக வாண்டெர் டசன் 24 ரன்கள் அடித்தார். ஹென்ரிச் கிளாசன் 22 ரன்களும் மில்லர் 15 ரன்களும் மட்டுமே அடித்தனர். இவர்களை தவிர மற்ற எந்த வீரருமே இரட்டை இலக்கத்தையே எட்டவில்லை. மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்திலும் அஷ்டன் அகரின் சுழலிலும் மளமளவென வீழ்ந்தனர். தென்னாப்பிரிக்க அணி 15.3 ஓவரிலேயே வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-1 என வென்றது. 

Also Read - ஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா? அந்த பையன ஏன் எடுக்கல? அணி நிர்வாகத்தை விளாசிய கபில் தேவ்

இந்த போட்டியில் 2.3 ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.           
 

click me!