வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 13, 2020, 4:46 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி சிட்னியில் இன்று நடந்தது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் கூட்டமே இல்லாமல், போட்டி நடத்தப்பட்டது. 

ரசிகர்களே இல்லாமலே நடத்தப்பட்ட முதல் கிரிக்கெட் போட்டி என்ற அடையாளத்துடன், வரலாற்றில் இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 258 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 24 ஓவரில் 124 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். வார்னர் 67 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஃபின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. 

ஸ்மித் 14 ரன்களிலும் ஷார்ட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஆனால் வழக்கம்போலவே சிறப்பாக ஆடிய லபுஷேன் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 52 பந்தில் 56 ரன்கள் அடித்து, கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். ஸ்மித், ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் சரியாக ஆடாதபோதிலும், லபுஷேனின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 258 ரன்கள் அடித்தது. 

259 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கினர். வழக்கமாக தொடக்கம் முதலே அடித்து ஆடக்கூடிய மார்டின் கப்டில், இந்த போட்டியில் மிகவும் பொறுமை காத்தார். 50 பந்துகளுக்கு மேல் பேட்டிங் ஆடிய பிறகுதான், முதல் பவுண்டரியையே அடித்தார். அதுவும் சிக்ஸர். கப்டில் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் நிகோல்ஸ், வில்லியம்சன், டெய்லர், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதற்கிடையே கப்டிலும் 73 பந்தில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டாம் லேதம் மட்டும் 38 ரன்கள் அடித்தார். ஆனாலும் வேறு யாருமே நிலைத்து நின்று ஒத்துழைப்பு கொடுத்து ஆடாததால், அந்த அணி வெறும் 187 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை வென்றது. 

Also Read - முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த சவுராஷ்டிரா

ஸ்டேடியத்தில் ரசிகர்களே இல்லாமல் நடத்தப்பட்ட முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 

click me!