#NZvsAUS பேட்டிங்கில் தெறிக்கவிட்ட மேக்ஸ்வெல், ஃபின்ச்! பவுலிங்கில் அசத்திய அஷ்டன் அகர்; ஆஸி., அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 4, 2021, 2:22 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் 3வது டி20 போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடும் இறங்கினர். வேட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் ஃபிலிப், 27 பந்தில் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஃபின்ச், அரைசதம் அடித்தார். 44 பந்தில் 69 ரன்கள் அடித்து ஃபின்ச்சும் ஆட்டமிழந்தார்.

அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல், காட்டடி அடித்து 31 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து மிரட்டலாக ஃபின்ஷ் செய்ய, 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக ஆடி அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். டெவான் கான்வே 38 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர நியூசிலாந்து வீரர்கள் யாருமே சரியாக ஆடாமல், ஆஸி., ஸ்பின்னர் அஷ்டன் அகரின் சுழலில் சரிய, 17.1 ஓவரில் வெறும் 144 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக அஷ்டன் அகர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

click me!