ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த நியூசிலாந்து.. மீண்டும் ஒருமுறை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 10:45 AM IST
Highlights

244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், எந்தவித போராட்டமுமின்றி ஆஸ்திரேலிய பவுலர்களிடம் சரணடைந்தனர். 

உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் பாகிஸ்தான் அணி வென்றது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் வார்னர் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. ஃபின்ச் 8 ரன்களிலும் வார்னர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மூன்றாம் வரிசையில் பேட்டிங்கிற்கு வந்த உஸ்மான் கவாஜா, ஒருமுனையில் நிலைத்து நிற்க, ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஃபெர்குசனும் நீஷமும் அபாரமாக வீசி ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை சரித்தனர். 92 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடி 72 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்களை குவித்து அலெக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். பவுலர்களால் கூட வீழ்த்த முடியாத அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வில்லியம்சன் வீழ்த்தினார். 

ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றிய கவாஜா, சதத்தை தவறவிட்டு 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டெயிலெண்டர்களில் கம்மின்ஸ் ஓரளவிற்கு பேட்டிங் ஆடுவார் என்பதால் அவர் 23 ரன்களை அடிக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 243 ரன்கள் அடித்தது. 

244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிகோல்ஸ் 8 ரன்களிலும் கப்டில் 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து சிறப்பாக ஆடினர். வில்லியம்சன் 40 ரன்களிலும் டெய்லர் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லேதம், டி கிராண்ட் ஹோம், நீஷம் ஆகியோர் சோபிக்காததால் நியூசிலாந்து அணியின் நிலை பரிதாபகரமானது. டெயிலெண்டர்களை மிட்செல் ஸ்டார்க் மளமளவென வீழ்த்தினார். வழக்கம்போலவே இந்த போட்டியிலும் அபாரமாக வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நியூசிலாந்து அணி வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆட்டநாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 24 விக்கெட்டுகளுடன் இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஆணிவேராக திகழ்கிறார். 
 

click me!