
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், ஓமன் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துணை கேப்டன் சுப்மன் கில் (5 ரன்) ஷா பைசலின் சூப்பர் பவிலிங்கில் கிளீன் போல்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக அதிரடியில் வெளுத்துக் கட்டினார். அவருக்கு சஞ்சு சாம்சன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
வெறும் 15 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா ராமநந்தி பந்தில் கேட்ச் ஆனார். இதன்பின்பு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அதாவது சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய பாண்ட்யா எதிர்முனையில் நின்றார். அப்போது சஞ்சு ஸ்டிரைட்டில் பந்தை அடிக்க அது பவுலரின் கையில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. அப்போது பாண்ட்யா கிரீசுக்கு வெளியே இருந்ததால் அவுட் ஆனார்.
இதனால் இந்திய அணி 73/3 என தடுமாறியது. பின்பு களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார். அதே வேளையில் எதிர்முனையில் சஞ்சு சாம்சன் சிறிது தடுமாற்றத்துடன் விளையாடினார். நன்றாக விளையாடிய அக்சர் படேல் 13 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களம் கண்ட சிக்சர் மன்னன் ஷிவம் துபே 5 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் தனது 3வது அரை சதம் விளாசினார்.
திலக் வர்மா சூப்பர் பேட்டிங்
45 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன் எடுத்து சஞ்சு சாம்சன் அவுட் ஆனார். இதனைத் தொடந்து தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய திலக் வர்மாவும் 18 பந்தில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்னிலும், பாண்ட்யா போல் ரன் அவுட் ஆன அர்ஷ்தீப் சிங்கும் 1 ரன்னில் வெளியேறினார்கள். கடைசி கட்டத்தில் ஹர்சித் ராணா 13 ரன் சேர்க்க இந்திய அணி 180 ரன்களை கடந்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதேன் ராமானந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஓமன் வீரர்கள் சிறப்பான பவுலிங்
மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி வரை பேட்டிங் செய்யவில்லை. இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட போதிலும் 200 ரன்களை தொட முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஓமன் அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்ததே ஆகும். சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்து வீசிய ஓமன் பவுலர்கள் அதிக ஸ்லோ பால்களையும் வீசினார்கள். இதேபோல் ஓமன் பீல்டிங்கும் ஓரளவு சிறப்பாக இருந்தது.