
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஓமனும் விளையாடி வருகின்றன. இதில் டாஸில் வெற்றி பெற்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என தெரிவித்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நம்பர் 1 டி20 பவுலர் வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பாஸ்ட் பவுலர்கள் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இல்லை.
டாஸ் போடும்போது ஒரு காமெடி நிகழ்ந்தது. டாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கிய ரவிசாஸ்திரி, இந்திய அணியின் மாற்றங்கள் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் (SKY) கேட்டார். அப்போது பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இல்லை. அவருக்கு பதில் ஹர்சித் ராணா இடம் பெற்றுள்ளார் என்று கூறிய சூர்யகுமார் பிளேயிங் லெவனில் விளையாடும் மற்றொரு வீரரான அர்ஷ்தீப் சிங் பெயரை மறந்து தடுமாறினார்.
ரோகித் சர்மா மாதிரி ஆகி விட்டேன்
கடைசி வரை அவருக்கு ஞாபகம் வரவில்லை. இறுதியில் ஒருவழியாக சுற்றி முற்றி பார்த்து அர்ஷ்தீப் சிங் பெயரை சொல்லி விட்டார். சூர்யகுமார் மறந்ததை பார்த்து ரவி சாஸ்திரி, ஓமன் கேப்டன் ஆகியோர் சிரித்தனர். அப்போது சூர்யகுமார், ''நான் ரோகித் சர்மா மாதிரி ஆகி விட்டேன் என நினைக்கிறேன்'' என்று சிரித்தபடி சொன்னார்.
மறதிக்கு பெயர் போன ரோகித் சர்மா
ஏனெனில் இந்திய அணியில் ரோகித் சர்மா மறதிக்கு பெயர் போனவர். பயிற்சிக்கு கிளவுசை எடுத்து செல்லாதது, பாஸ்போர்ட் மறந்து சென்றது என அவர் மறந்த பட்டியல் ஏராளம். இதை மனதில் வைத்து தான் ரோகித்தை சூர்யகுமார் கலாய்த்தார். சூர்யகுமார் யாதவ் போல் ஓமன் கேப்டன் ஜிதேந்தர் சிங்கும் தங்கள் அணியில் ஆடும் வீரர்களின் பெயரை மறந்தது குறிப்பிடத்தக்கது.