வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அஷ்வின் இல்லை.. கேப்டன் ரோஹித் கம்பேக்..! பாண்டியா, ஜடேஜாவின் நிலை இதுதான்

By karthikeyan VFirst Published Jan 25, 2022, 9:42 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி குறித்து வெளிவந்துள்ள அப்டேட்டை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.

அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்தியாவிற்கு இன்று வந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

தென்னாப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபாரமாக விளையாடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள், மிடில் ஆர்டர் ஆகிய பிரச்னைகள் உள்ள நிலையில், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த தொடருக்கான அணி தேர்வு தொடர்பான மீட்டிங் இன்னும் 2 நாட்களில் நடக்கும் என தெரிகிறது. காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை அடைந்துவிட்ட ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அணி தேர்வுக்கான ஆலோசனைக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளைப்பந்து அணிகளில் இடம்பிடித்த சீனியர் ஸ்பின்னர் அஷ்வின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிட்னெஸை அடைந்துவிட்ட ஜடேஜா, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங், பவுலிங் செய்துவருகிறார். எனவே ஜடேஜா அணியில் இடம்பெறுவார். முழு ஃபிட்னெஸை இன்னும் அடைந்திராத ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை.
 

click me!