முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகிய ஸ்பின் லெஜண்ட்ஸே செய்யாத சாதனையை செய்த நம்ம அஷ்வின்

By karthikeyan VFirst Published Oct 4, 2019, 1:07 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சிய முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகிய லெஜண்ட் ஸ்பின்னர்களே செய்யாத சாதனை ஒன்றை நமது அஷ்வின் செய்து அசத்தியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 20 ஓவர்கள் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம், டி பிருய்ன் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் அஷ்வின். அடுத்ததாக நைட் வாட்ச்மேனாக அனுப்பப்பட்ட டேன் பீட்டை அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் பவுமாவின் விக்கெட்டை விரைவிலேயே இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். ஆனால் அதன்பின்னர் எல்கரும் டுப்ளெசிஸும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடிவருகின்றனர். எல்கரை தொடர்ந்து டுப்ளெசிஸும் அரைசதம் அடித்துவிட்டார். எல்கர் 80 ரன்களை கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். 

இந்த போட்டியில், இதுவரை அஷ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்ரம் மற்றும் டி ப்ருய்ன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் நேற்று வீழ்த்தினார். இதில் மார்க்ரமின் விக்கெட்டை புதிய பந்தில் வீழ்த்தினார் அஷ்வின். இந்த விக்கெட் முதல் புதிய பந்தில் அஷ்வின் வீழ்த்திய 71வது விக்கெட். 

பெரும்பாலும் முதல் புதிய பந்தில் ஃபாஸ்ட் பவுலர்கள் தான் வீசுவார்கள். ஆனால் தோனி கேப்டனாக இருந்தபோது, அந்த பாரம்பரிய முறையை எல்லாம் உடைத்து அஷ்வினிடம் புதிய பந்தை கொடுத்து வீசவைத்திருக்கிறார். அதற்கான பலனையும் அறுவடை செய்திருக்கிறார். அதே முறையை தற்போது கேப்டன் கோலி மற்றும் மற்ற கேப்டன்களும் பின்பற்றுகின்றனர். அதிலும் இந்த போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் ஆடுகளத்தின் தன்மை மாறியதால், ஸ்பின் பவுலரான அஷ்வினிடம் நான்காவது ஓவரை கொடுத்தார்.

அதன்விளைவாக அஷ்வின் தனது முதல் ஸ்பெல்லிலேயே மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட் புதிய பந்தில் அஷ்வின் வீழ்த்திய 71வது விக்கெட். இதன்மூலம் புதிய பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில், புதிய பந்தில் 107 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட் முதலிடத்திலும் 106 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஃபிளாண்டர் 76 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்திலும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடன் நான்காமிடத்திலும் உள்ளனர்.

முதல் நான்கு இடத்தில் உள்ளவர்களுமே ஃபாஸ்ட் பவுலர்களாக இருக்கும் நிலையில், ஐந்தாமிடத்தில் ஸ்பின் பவுலரான அஷ்வின் இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் புதிய பந்தில் ஃபாஸ்ட் பவுலர்கள்தான் அதிகமாக வீசுவார்கள் என்பதால் அவர்களுக்குத்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அஷ்வினை நம்பி அதிகமான முறை புதிய பந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார் என்பதற்கான சான்றுதான் இந்த சாதனை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகிய லெஜண்ட் ஸ்பின்னர்கள் கூட புதிய பந்தில் அதிகமாக வீசியதில்லை. இத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தியதில்லை. 
 

click me!