இலங்கை ஆடும் கிரிக்கெட் போட்டிகளை டிவியில் கூட பார்க்கக்கூடாது..! ரணதுங்கா கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Jul 6, 2021, 6:18 PM IST
Highlights

இலங்கை அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளை டிவியில் கூட பார்க்கக்கூடாது என்று அந்த அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

1996ல் ரணதுங்கா கேப்டன்சியில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது. ஜெயசூர்யா, முரளிதரன், அட்டப்பட்டு, சமிந்தா வாஸ், சங்கக்கரா, ஜெயவர்தனே, மலிங்கா என பல தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 2007 மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

மிகச்சிறந்த டாப் அணியாக திகழ்ந்த இலங்கை அணி, அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியாகவே மதிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 1ம் தேதி நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்வி, ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் 428வது தோல்வி.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி. 427 தோல்விகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்த நிலையில், 428 தோல்விகளை அடைந்து இலங்கை அணி முதலிடம் பிடித்தது. டி20 கிரிக்கெட்டிலும் அதிக தோல்விகள் அடைந்த அணி இலங்கை அணி தான். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 70 தோல்விகளை அடைந்துள்ளது இலங்கை அணி.

ஒருகாலத்தில் சிறந்த அணியாக திகழ்ந்த இலங்கை, தற்போது படுமோசமாக ஆடிவருகிறது. இந்திய பிரதான அணி இங்கிலாந்தில் இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் அவமானம் என்று கடுமையாக பேசியிருந்த ரணதுங்கா, இப்போது அதைவிட கடுமையாக இலங்கை அணியை தாக்கியிருக்கிறார்.

இலங்கை அணி குறித்து பேசிய அந்த அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டனான அர்ஜூனா ரணதுங்கா, நாம்(இலங்கை மக்கள்) இலங்கை ஆடும் போட்டிகளை டிவியில் பார்ப்பதைக்கூட நிறுத்த வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலேயே இலங்கை அணியின் லெட்சணத்தை பார்த்தோம். மோசமான நிர்வாகம், ஊழல், ஒழுக்கமின்மை ஆகிய அனைத்தும் ஒருசேர இலங்கை அணியிடம் நிறைந்திருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் இந்த அவலநிலைக்கு காரணம் என்று ரணதுங்கா விளாசியுள்ளார்.
 

click me!