அவரு எழுந்தபின் தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு.. யாராவது அப்படி ஆசைப்படுவாங்களா..? ஆர்ச்சர் உருக்கம்

By karthikeyan VFirst Published Aug 18, 2019, 4:57 PM IST
Highlights

148 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய அந்த பவுன்ஸருக்கு ஸ்மித் ரியாக்ட் செய்வதற்குள், பந்து வேகமாக வந்து ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் பலமாக அடித்தது. அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரம் போட்டு இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார் ஸ்மித். 

அபாரமாக ஆடிய ஸ்மித், 92 ரன்களில் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார் ஸ்மித். சதத்தை தவறவிட்டிருந்தாலும், சாதனையை தவறவிடவில்லை. இந்த 92 ரன்களுடன் சேர்த்து, ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். 6 முறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்த மைக் ஹசியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார் ஸ்மித். 

ஸ்மித்தின் விக்கெட்டுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி மளமளவென சரிய, 250 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால் போட்டி டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது. 

இந்த போட்டியில் மோசமான ஒரு பவுன்ஸரை போட்டு ஸ்மித்தை நிலைகுலையை செய்தார் ஆர்ச்சர். ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிக்கொண்டிருந்தனர். அப்போது, 77வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை தலைக்கு நேராக பவுன்ஸராக வீசினார். அந்த பந்தை அடித்தால் விக்கெட் போய்விடும் என்பதால் அதை அடிக்கவும் முடியாது.

148 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய அந்த பவுன்ஸருக்கு ஸ்மித் ரியாக்ட் செய்வதற்குள், பந்து வேகமாக வந்து ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் பலமாக அடித்தது. அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். உடனடியாக ஃபிசியோ வந்து பரிசோதித்தார். அதன்பின்னர் ஸ்மித் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் சிடில் விக்கெட்டுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்த ஸ்மித், அதன்பின்னர் பெரிதாக ஆடவில்லை. 92 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். 

ஸ்மித் அடிபட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது ஃபிசியோ வந்து பரிசோதித்தார். ஸ்மித் வலியால் துடித்து கொண்டிருந்த அந்த வேளையில், ஆர்ச்சரும் பட்லரும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். ஒருத்தன் வலியால் துடிச்சுகிட்டு இருக்கும்போது இப்படியா சிரிப்ப.. என நெட்டிசன்கள் ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இது ஸ்போர்ஸ்மேன்ஷிப்புக்கான அழகல்ல என்றும் விளாசிவருகின்றனர். 

ஆர்ச்சரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அதுகுறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். ஸ்மித் கீழே விழுந்ததை கண்டு எங்கள் இதயமே நொறுங்கியது. அவர் திரும்ப எழுந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல வேண்டும் என்று யாருமே நினைக்கமாட்டார்கள் என்று ஆர்ச்சர் உருக்கமாக தெரிவித்தார். 
 

click me!