அவனுங்க பண்ண தப்புக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.. சும்மா விட்ரக்கூடாது..! அரவிந்த டி சில்வா அதிரடி

By karthikeyan VFirst Published Jul 13, 2021, 4:32 PM IST
Highlights

இங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்கள் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்கா குணதிலகா ஆகியோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் வீரர் அரவிந்தா டி சில்வா கருத்து கூறியுள்ளார்.
 

1996ல் ரணதுங்கா கேப்டன்சியில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது. ஜெயசூர்யா, முரளிதரன், அட்டப்பட்டு, சமிந்தா வாஸ், சங்கக்கரா, ஜெயவர்தனே, மலிங்கா என பல தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 2007 மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

மிகச்சிறந்த டாப் அணியாக திகழ்ந்த இலங்கை அணி, அண்மைக்காலமாக ச ர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியாகவே மதிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஒருநாள் தொடரையும் இழந்தது. இங்கிலாந்தில் ஒரு போட்டியில் கூட இலங்கை ஜெயிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த அணியின் 3 முக்கியமான வீரர்களான குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணதிலகா ஆகிய மூவரும் முழு தொடரிலும் ஆடாமல் பாதியில் இலங்கை திரும்பியதுதான். அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதற்கு காரணம், ஒழுங்கீன நடவடிக்கை ஆகும்.

கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. வீரர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் குசால் மெண்டிஸ், தனுஷா குணதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகிய இலங்கை அணியின் 3 முக்கியமான வீரர்களும் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றியதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்த வீரர்களின் பொறுப்பற்ற செயல், இலங்கை கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நான் மட்டும் அணியின் கேப்டனாக இருந்திருந்தால், அவர்கள் மூவரையும் 2-3 அறை அறைந்திருப்பேன் என்று முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள அரவிந்த டி சில்வா, அவர்களது ஒழுங்கீன நடவடிக்கையை அவர்கள் உணர வேண்டும். நாட்டுக்காக ஆடும் அவர்கள் பொறுப்பை உணர வேண்டும். பயோ பபுள் உருவாக்கப்பட்டால், அனைத்து வீரர்களும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். 

இந்த 3 வீரர்களுமே அவர்களது கெரியரில் மோசமான ரெக்கார்டை வைத்துள்ளனர். அவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே, இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.  கடும் தண்டனை வழங்காவிட்டால், இந்த தவறிலிருந்து அவர்கள் பாடம் கற்கவே மாட்டார்கள் என்று அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

click me!