டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் 13ஆவது ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது.
இந்த 2 போட்டிகளுமே சிஎஸ்கேயின் ஹோம் மைதானமான எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து சிஎஸ்கே அவே மைதானமான விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் கடந்த 2 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இந்த பயிற்சியில் தோனி கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் மாற்று விக்கெட் கீப்பரான ஆரவெல்லி அவனிஷ் விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக தோனி இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.