கொரோனா ஊரடங்கு: தயவுசெய்து எல்லாரும் வீட்டில் இருங்க.. கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த அனில் கும்ப்ளே

By karthikeyan VFirst Published Mar 28, 2020, 2:58 PM IST
Highlights

கொரோனா எதிரொலியாக நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தயவு செய்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் காட்டுத்தீபோல் பரவி மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது.

இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமூக தொற்றாக பரவியதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. 

ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 900ஐ கடந்துவிட்டது. பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உள்ளது. இந்தியாவில் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் கொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, சரியான நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர். 

தனிமைப்படுதல் மற்றும் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வுகளை மத்திய,  மாநில அரசுகள் ஏற்படுத்திவருகின்றன. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் காரணமே இல்லாமலோ அல்லது பொய்யான காரணங்களை கூறியோ பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். அப்படி பொதுவெளியில் சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். காரணத்துடன் வெளியே வந்தவர்களுக்கு சமூக விலகலின் அவசியத்தை எடுத்துரைத்து அனுப்பிவைக்கின்றனர்.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர், பொதுவெளியில் சிலர் பொறுப்பின்றி சுற்றுவது குறித்த வேதனையை பதிவு செய்ததுடன், அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை ஏற்று அதை பின்பற்றி, கொரோனாவை ஒழிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும், தயவு செய்து தனிமைப்படுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, டுவிட்டரில் வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல; உலகையே அச்சுறுத்திவருகிறது என்பது உங்களுக்கு தெரியும். சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலமாகவே அந்த வைரஸ் தொற்றாமல் நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். எனவே நமது சுய பாதுகாப்பிற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், அரசாங்கம் ஆகியோரின் அறிவுரையை ஏற்று அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.

21 நாள் ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. தயவு செய்து அதை பின்பற்றுங்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.., அனைவரும் வீட்டிலேயே இருங்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட நினைப்பார்கள். தயவு செய்து அவர்களை வெளியே அனுப்பிவிடாதீர்கள். குழந்தைகளை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருப்போம்.. பாதுகாப்பாக இருப்போம் என்று அனில் கும்ப்ளே  அந்த வீடியோவில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

ಮನೆಯಲ್ಲೇ ಇರಿ! ಸುರಕ್ಷಿತವಾಗಿರಿ!🙏🏼 pic.twitter.com/6P0hLh6GAE

— Anil Kumble (@anilkumble1074)
click me!