கோலியுடன் மோதல்.. பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய விவகாரம்..! மனம் திறந்த அனில் கும்ப்ளே

By karthikeyan VFirst Published Jul 23, 2020, 10:56 PM IST
Highlights

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அனில் கும்ப்ளே.
 

இந்திய அணியின் முன்னாள் ரிஸ்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே. இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 15 ஆண்டுகள் ஆடிய கும்ப்ளே, 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும் 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவருக்கு அடுத்து, மூன்றாமிடத்தில் இருக்கிறார் கும்ப்ளே. டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டுவிதமான போட்டிகளிலுமே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் அனில் கும்ப்ளே தான். 

இந்திய அணியின் மேட்ச் வின்னராக 10 ஆண்டுகளுக்கும் மேல் திகழ்ந்த அனில் கும்ப்ளே, ஒரு பவுலராக மட்டுமல்லாது ஒரு கேப்டனாகவும் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 

இந்திய அணிக்காக ஒரு வீரராக சிறந்த பங்களிப்பை செய்து ஓய்வுபெற்ற அனில் கும்ப்ளே, ஓய்வுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலும் இருந்தார். 2016ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தோனி 2017ம் ஆண்டுதான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பின்னர் தான் கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். 

கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, டெஸ்ட் அணியை கோலியும் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான இந்திய அணியை தோனியும் கேப்டனாக இருந்து வழிநடத்தினர். தோனியுடன் கும்ப்ளேவிற்கு நல்ல உறவு இருந்தது. அதனால் ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் கோலி - கும்ப்ளே இடையே நல்ல உறவு இல்லை. 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பையும் கோலி ஏற்க, கும்ப்ளே - கோலி இடையேயான கருத்து வேறுபாடுகள் காலப்போக்கில் மோதலாக மூண்டது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது. அதன்பின்னர், கோலி - கும்ப்ளே மோதல் பொதுவெளிக்கு வந்தது. அதனால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அவரே ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கினார். அதன்பின்னர் தான் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது குறித்து அனில் கும்ப்ளே மனம் திறந்து பேசியுள்ளார். ஜிம்பாப்வே முன்னால் வீரர் பொம்மி பாங்வாவுடனான உரையாடலில் பேசிய அனில் கும்ப்ளே, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அந்த ஓராண்டு மிகச்சிறந்த அனுபவம். உண்மையாகவே அந்த ஓராண்டில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றோம்.

இந்திய அணிக்கு என்னால் முடிந்தவரை சில பங்களிப்புகளை செய்தேன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே தவிர எந்தவிதமான வருத்தமும் கிடையாது. பயிற்சியாளர் பதவியின் முடிவு நல்லவிதமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. ஒரு பயிற்சியாளராக, வெளியேற வேண்டிய நேரம் வரும்போது வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். அந்த ஓராண்டில் முக்கிய பங்காற்றியதற்கு சந்தோஷப்படுகிறேன் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றபின்னர், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளையெல்லாம் இந்திய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த ஓராண்டில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.  
 

click me!