2 முக்கியமான வீரர்கள் கம்பேக்.. யானை பலம் பெற்ற இங்கிலாந்து அணி..! கடைசி டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jul 23, 2020, 8:05 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என சமனடைந்தது. 

எனவே தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிதான் தொடரை வெல்லும். எனவே தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளதால், கடைசி போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை. 

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் கடைசி போட்டியில் ஆடுகின்றனர். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியான ஆண்டர்சன் - பிராட் ஜோடியின் பவுலிங்கைக்காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் போட்டியில் பிராட் ஆடாத நிலையில், இரண்டாவது போட்டியில் ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் அவர் ஆடவில்லை. இந்நிலையில், மூன்றாவது போட்டியில் இருவரும் இணைந்து ஆடவுள்ளனர். 

பென் ஸ்டோக்ஸுக்கு கடைசி போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் கடைசி போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். 

கடைசி டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் கிராவ்லி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஓலி போப், டோமினிக் பெஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் உட், சாம் கரன். 

கடைசி போட்டிக்கான அணியில் ஆண்டர்சன், பிராட், மார்க் உட், ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகிய அனைவரும் இடம்பெற்றிருப்பதால், ஆடும் லெவனில் இடம்பெறும் காம்பினேஷன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். எனவே இன்னும் ஒரு ஃபாஸ்ட் பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் யார் என்பதுதான் பெரிய கேள்வி. சாம் கரன் - கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் அணியில் இடம் கிடைக்கும். மார்க் உட், ஆர்ச்சர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். 
 

click me!