கிரேக் சேப்பல் மீது மட்டுமே குற்றம்சாட்ட மாட்டேன்..! தன்னை ஓரங்கட்டியது குறித்து தாதா வெளியிட்ட பரபரப்பு தகவல்

By karthikeyan VFirst Published Jul 23, 2020, 3:53 PM IST
Highlights

இந்திய அணியிலிருந்து 2005ல், தான் ஓரங்கட்டப்பட்ட விவகாரத்தில் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச்சிறந்த பங்காற்றியவர். தனது அதிரடியான பேட்டிங்கால் மட்டுமல்லாது, தனது ஆக்ரோஷமான மற்றும் சிறப்பான கேப்டன்சியாலும் ரசிகர்களை மனதை கொண்டவர்.

ஆக்ரோஷமான குணநலனுடைய கங்குலி, தனது ஆக்ரோஷத்தை அதிரடியான பேட்டிங்கில் மட்டுமல்லாது, கேப்டன்சியிலும் காட்டி, இந்திய அணியை சூதாட்டப்புகாருக்கு பின்னர் மறுகட்டமைப்பு செய்து வளர்த்தெடுத்தவர். 

சிறந்த கேப்டனாக திகழ்ந்த அதேவேளையில், சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து, எதிரணிகளை தனது அதிரடியான பேட்டிங்கால் தெறிக்கவிட்டவர் கங்குலி. ஆஃப் திசையின் கடவுள் என்று கங்குலி அழைக்கப்படுகிறார். கங்குலி ஆஃப் திசையில் அடிக்கும் ஷாட்டுகளும், ஸ்பின் பவுலிங்கில் இறங்கிவந்து சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளும் கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுபவை. 

இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஆடினார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களையும், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களையும் குவித்துள்ளார். 

கங்குலியின் கிரிக்கெட் கெரியரில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்துள்ளன. கங்குலியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் பாதித்த சர்ச்சை நபர் கிரேக் சேப்பல். சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 2007 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு காரணம், கிரேக் சேப்பலின் மோசமான அணுகுமுறைகள் தான்.

கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையேயான மோதல் பெரிய சர்ச்சையாக வெடித்தது. கங்குலியை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது அணியிலிருந்தும் நீக்கினார் கிரேக் சேப்பல். 2005ல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 2006ம் ஆண்டு கம்பேக் கொடுத்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் கங்குலி. 

இந்நிலையில், தான் ஓரங்கட்டப்பட்டது குறித்தும் கிரேக் சேப்பல் குறித்தும் பேசியுள்ள கங்குலி, நான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட விவகாரத்தில் கிரேக் சேப்பல் மட்டுமே காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் அதை தொடங்கிவைத்தது அவர் தான் என்பதில் சந்தேகமில்லை. என்னை பற்றி அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் மீடியாவில் கசியவிடவும் பட்டது. ஒரு கிரிக்கெட் அணி என்பது குடும்பம் மாதிரி. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டுகொள்ள வேண்டும். 

நீங்கள் ஒரு கோச்.. நான் இப்படித்தான் ஆட வேண்டும்; அதுதான் சரியாக இருக்கும் என நம்பினால், அதை என்னிடமே சொல்லிவிடலாம். ஆனால் க்ரேக் சேப்பல் அதை செய்யவில்லை. நான் மீண்டும் அணியில் இணைந்தபோது, என்னிடம் வந்து பேசினார். அவரது கருத்தை சொன்னார். அதை முதலிலேயே செய்திருக்கலாமே என்று கங்குலி தெரிவித்தார். 
 

click me!