Andrew Symonds: ஐபிஎல் முதல் சீசனில் தோனிக்கு அடுத்து சைமண்ட்ஸ் தான்..! தெரியுமா உங்களுக்கு..?

By karthikeyan VFirst Published May 15, 2022, 4:51 PM IST
Highlights

கார் விபத்தில் இன்று உயிரிழந்த ஆஸி., முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்த ஐபிஎல் சுவாரஸ்யமான தகவலை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. 

1998ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய 26 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி சுமார் 6500 ரன்களை குவித்துள்ளார். 

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சைமண்ட்ஸ், கடும் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். 2007ல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரில் தன்னை ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதாக பரபரப்பை கிளப்பினார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அந்த விவகாரத்தில் தனக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவாக செயல்படவில்லை என்ற அதிருப்தி அவருக்கு இருந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவரது ஃபார்ம் மோசமடைந்து, அத்துடன் அவரது கெரியரும் முடிந்தது.

சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சைமண்ட்ஸின் கெரியர், அவரது கெரியரின் உச்சத்தில் இருந்தபோதே முடிந்ததற்கு அவரது ஒழுக்கமின்மை தான் காரணம். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என முழுமையான ஆல்ரவுண்டராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்தவர் தான் சைமண்ட்ஸ். ஆனால் குடிப்பழக்கம் அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அவரது கெரியர் முடிய காரணமாக அமைந்தது.

2005-07ம் ஆண்டுகள் அவரது கெரியரின் உச்சத்தில் இருந்தார். அதன்விளைவாக, ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டில் அவருக்கு அதிக கிராக்கி இருந்தது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டில் முதல் சீசனுக்கான ஏலத்தில் அதிரடி வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டின.

ஐபிஎல் முதல் சீசனில் அதிகபட்ச தொகைக்கு விலைபோனவர் தோனி. அப்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக இருந்த தோனியை சிஎஸ்கே அணி ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்த அதிகபட்ச தொகையான ரூ.5.4 கோடிக்கு ஆண்ட்ரூ சைமண்ட்ஸை ஏலத்தில் எடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணி(இப்போதைய சன்ரைசர்ஸ்).

ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் கட்டமைக்கப்பட்ட அந்த அணியில், சைமண்ட்ஸ் முக்கியமான வீரராக திகழ்ந்தார். அந்த அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட்டை விட அதிக தொகைக்கு விலைபோனவர் சைமண்ட்ஸ் தான். ஐபிஎல் முதல் சீசனில் அதிக தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

அதற்கு காரணம், அவரது முப்பரிமாண ஆட்டம் தான். பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது, அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த ஃபீல்டராகவும் திகழ்ந்தவர் சைமண்ட்ஸ். அதன் காரணமாகத்தான் அவரை ரூ.5.4 கோடி கொடுத்து எடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. 2008லிருந்து 2010ம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடினார் சைமண்ட்ஸ். இதற்கிடையே, 2009ம் ஆண்டு ஐபிஎல் 2வது சீசனில் சைமண்ட்ஸ் அங்கம் வகித்த கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணிதான் கோப்பையை வென்றது. அந்த கோப்பையை வெல்ல சைமண்ட்ஸும் முக்கியமான காரணம்; அபாரமான பங்களிப்பை செய்திருந்தார்.

2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார் சைமண்ட்ஸ். அதன்பின்னர் ஐபிஎல்லில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 39 போட்டிகளில் ஆடி 974 ரன்கள் அடித்துள்ளார்; 20விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
 

click me!