கேகேஆர் அணியிலிருந்து விலகும் ஆண்ட்ரே ரசல்..?

By karthikeyan VFirst Published May 3, 2020, 10:44 PM IST
Highlights

கேகேஆர் அணியில் ஆடுவது குறித்து ஆண்ட்ரே ரசல் மனம் திறந்து பேசியுள்ளார்.
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனாவால் 13வது சீன்சன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் ஐபிஎல் தான் அதிக பணம் புழங்கும் தொடர். 

ஐபிஎல்லில் வெறும் இரண்டு மாதத்தில் பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடவே அதிகம் விரும்புகின்றனர். எனவே ஐபிஎல் 13வது சீசனை பிசிசிஐ, இந்திய வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் எதிர்நோக்கி காத்துள்ளனர். 

சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் அணிகள் சார்ந்த ஊர்களின் செல்லப்பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் சில அணிகளில் நட்சத்திர வீரர்களாக நிரந்தர இடம் பிடித்துள்ளனர். சிஎஸ்கேவில் பிராவோ, மும்பை இந்தியன்ஸில் பொல்லார்டை போல கேகேஆர் அணியின் செல்லப்பிள்ளையாக ஆண்ட்ரே ரசல் திகழ்கிறார். 

ஆண்ட்ரே ரசல் கடைசி சில ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்ற வல்லவர். சிக்ஸர்களாக விளாசி பல அசாத்திய வெற்றிகளை கேகேஆர் அணிக்கு பெற்று கொடுத்த ரசல், கேகேஆர் அணி மற்றும் ரசிகர்களின் செல்லப்பிள்ளை. கொல்கத்தா ஈடன் கார்டன் மட்டுமல்லாது, ரசல் எந்த மைதானத்தில் ஆடினாலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

கேகேஆர் அணியின் நட்சத்திர வீரராக திகழும் ஆண்ட்ரே ரசல், கேகேஆர் அணியில் ஆடுவது குறித்து மனம்திறந்து, அந்த அணி மற்றும் ரசிகர்களுடனான உறவு குறித்து பேசியுள்ளார். 

கேகேஆர் அணி குறித்து பேசிய ரசல், ஒரு உண்மையை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். மற்ற டி20 தொடர்களை விட, ஐபிஎல்லில் ஆடும்போதுதான் அதிக உற்சாகமும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக ஈடன் கார்டனில் ஆடும்போது, ரசிகர்கள் எனக்கு அளிக்கும் ஆதரவும் வரவேற்பும் அபரிமிதமானது. அந்த ஆதரவுக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது. ரசிகர்களின் உண்மையான அன்பு அது. அது சில நேரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், அது நல்ல நெருக்கடிதான். வெற்றியை நோக்கி ஆட உத்வேகமாக அது அமையும். 

கடைசி 5 ஓவரில் ஒரு ஓவருக்கு 12-13 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடுவது எனக்கு பிடிக்கும். அப்போது ரசிகர்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அதுதான் வெற்றியை நோக்கி உந்தும். ஒருவேளை 2 போட்டிகளில் தோற்றுவிட்டால் கூட, மூன்றாவது போட்டியிலும் ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் உற்சாகப்படுத்துவார்கள். எனவே எப்போதுமே கேகேஆர் அணிக்காகவே ஆட விரும்புகிறேன் என்று ஆண்ட்ரே ரசல் தெரிவித்துள்ளார்.
 

click me!