சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்காக ஐபிஎல் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 ஆண்டுகளாக இடம் பெற்று விளையாடி வந்த ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியும் இந்த தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு அணியும் 3 அல்லது 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு சிஎஸ்கேயின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: குறைந்தது 6 ஆண்டுகள் வரையில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் விளையாடுவார். கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அவர் கேப்டனாக இருக்க முடிவு செய்தால் சிஎஸ்கே அணியில் இடம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும். தோனி ஓய்விற்கு பிறகு ரோகித் சர்மா சிஎஸ்கே அணியை வழிநடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் குழப்பம், சிஎஸ்கேயின் அடுத்த கேப்டன் யார் என்று பல கோணங்களின் வாயிலாக ரோகித் சர்மா சிஎஸ்கேயின் கேப்டனாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.