சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதே போன்று சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தான் மற்றொரு இந்திய வீரரும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது: நன்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். எப்படி ஒரு வலிமையான குதிரை ஓடிக் கொண்டிருப்பது போன்று நான் எப்போதும் எனது நாட்டிற்காக சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளேன்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து எனது சிறப்பான பங்களிப்பை நான் எனது நாட்டிற்காக அளிப்பேன். டி20 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நனவானது. இது தான் எனது டி20 கிரிக்கெட்டின் உச்சம். எனக்கு ஆதரவளித்ததற்கு, இந்த நினைவுகளை அளித்ததற்கு மிக்க நன்றி." என ரவீந்திர ஜடேஜா கூறி இருக்கிறார். டி20 உலகக் கோப்பையை வென்ற நினைவுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும், ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் நன்றி. ஜெய் ஹிந்த் ரவீந்திர ஜடேஜா என்று பதிவிட்டுள்ளார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜாவிற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி அவருக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ். பல போட்டிகளில் இருவருமே சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பந்து வீச போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய ஜடேஜா 35 (0, 7, 9*, 17*, 2) ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பவுலிங்கில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரையில் ரவீந்திர ஜடேஜா 74 போட்டிகளில் 41 இன்னிங்ஸ் விளையாடி 515 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 46* ரன்கள் எடுத்திருக்கிறார். பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கில் 71 இன்னிங்ஸ் விளையாடி 54 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்து வீச்சு 3/15 ஆகும்.