சேவாக்கைவிட திறமையானவன் தான்.. ஆனால் மூளை கிடையாது.. சொந்த நாட்டு சக வீரரை பற்றிய அக்தரின் துணிச்சல் பேச்சு

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 6:16 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் நசீர், சேவாக்கைவிட திறமையான பேட்ஸ்மேன் தான் என்றும் ஆனால் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் அக்தர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களில் சேவாக்கும் ஒருவர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, முதல் 10 ஓவர்களிலேயே பெரிய ஸ்கோர் செய்து, எதிரணி பவுலர்களை இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே அச்சுறுத்திய பேட்ஸ்மேன் சேவாக். 

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே நிதானமாகத்தான் தொடங்க வேண்டும் என்ற பாரம்பரிய முறையை மாற்றி அதிரடியாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி தொடக்கம் சாத்தியம் என்பதை நிரூபித்து, இன்றைய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் போன்றோருக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர் சேவாக்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அதகளம் செய்தவர் சேவாக். ஆனால் சேவாக்கைவிட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் நசீர் திறமையான பேட்ஸ்மேன் என்றும், ஆனால் சேவாக் அளவிற்கு மூளையில்லை என்றும் இம்ரான் நசீரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இம்ரான் நசீர் குறித்து பேசியுள்ள அக்தர், சேவாக்கைவிட இம்ரான் நசீர் திறமையான பேட்ஸ்மேன்  தான். ஆனால் சேவாக் அளவிற்கு நசீருக்கு மூளையில்லை. நசீர் மிகத்திறமையான பேட்ஸ்மேன். பேட்டிங் திறமையின் அடிப்படையில் பார்த்தால், நசீருடன் யாரையுமே ஒப்பிட முடியாது. அந்தளவிற்கு திறமையான பேட்ஸ்மேன். இந்தியாவுக்கு எதிராக அபாரமான ஒரு சதத்தை நசீர் அடித்தபோது, நசீருக்கு பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

சேவாக்கை விட அருமையான பேட்டிங் திறமை நசீருக்குள் இருந்தது. அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது நசீர் சிறந்த ஃபீல்டரும் கூட. ஆனால் அவரை பாகிஸ்தான் அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
 
இம்ரான் நசீர், 1999 முதல் 2007ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 427 ரன்களையும் 79 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களுடன் 1895 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!