முட்டா பசங்களா.. அந்த பையன்கிட்ட இருந்து கத்துக்கங்க.. சொந்த நாட்டு வீரர்களை செம கடுப்பில் திட்டிய ஷோயப் அக்தர்

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 3:27 PM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக படுமோசமாக ஆடிய பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். 
 

அண்டர் 19 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு நேர்மாறாக, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி படுதோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியை வெறும் 172 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. பின்னர் 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, விக்கெட்டையே இழக்காமல் இலக்கை எட்டியது. தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் இணைந்தே இலக்கை எட்டிவிட்டனர். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்தார். சக்ஸேனா அரைசதம் அடித்தார். இந்த வெற்றியின் மூலம், அண்டர் 19 உலக கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது இறுதி போட்டிக்கு முன்னேறி இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியை வெகுவாக பாராட்டிய ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அக்தர், அண்டர் 19 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். நன்றாக முயற்சி செய்தீர்கள். ஆனால் இறுதி போட்டிக்கு தகுதி பெறுமளவிற்கான முயற்சி செய்யவில்லை. இந்திய அணி தான் இறுதி போட்டிக்கு செல்ல தகுதியான அணி.

பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் பஃபுமோசமாக இருந்தது. ஃபீல்டிங் செய்யும்போது உங்களால்(வீரர்கள்) டைவ் கூட அடிக்க முடியாதா? பாகிஸ்தான் அணி ஆடிய விதத்திற்கு, இறுதி போட்டிக்கு செல்ல தகுதி கிடையாது. சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். பாகிஸ்தான் அணி ஆடிய விதமும் ஃபீல்டிங் செய்த விதமும் முட்டாள்தனமானது. பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் திறமையின் பின்னால் ஓடினார். இப்போது அவர் பின்னால் பணம் ஓடிவந்துகொண்டிருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று அக்தர் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!