
ஓமன் நாட்டில் ஏசிசி டி20 பிரீமியர் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஓமன், பக்ரைன், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, நேபாள், ஹாங்காங், கத்தார், கம்போடியா, சவுதி அரேபியா என்று 10 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 பிரிவுகளாக இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதில், இன்று நடந்த குரூப் ஏ 7ஆவது போட்டியில் நேபாள் மற்றும் கத்தார் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாள் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. இதில் நேபாள் கிரிக்கெட் வீரர் திபேந்திர சிங் ஐரி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில் போட்டியின் 20ஆவது ஓவரை கத்தார் அணி வீரர் கம்ரான் கான் வீசினார். அந்த ஓவரில் மட்டும் திபேந்திர சிங் ஐரி 6, 6, 6, 6, 6, 6 என்று வரிசையாக 6 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்தார். ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் நேபாள் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் அதிரடி மன்னன் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கிரான் பொல்லார்டு 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்திருந்த நிலையில், இவர்களது சாதனை புத்தகத்தில் தற்போது திபேந்திர சிங் ஐரியும் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.
மேலும், இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் பல்வேறு சாதனைகளை படைத்திருந்து. டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி 314/3 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது. மேலும் இந்த தொடரில் திபேந்திர சிங் ஐரி தொடர்ந்து 6 அரைசதங்கள் விளாசி சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி குசால் மல்லா 34 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். மேலும், ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லரின் 35 பந்துகள் சாதனையை முறியடித்து மல்லா சாதனை புத்தகத்தில் முதலாவதாக இடம் பெற்றார்.
இதில் மல்லா 12 சிக்ஸ், 8 பவுண்டரி உள்பட 137 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக நேபாள் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்த சாதனையை தொடர்ந்து தற்போது டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் நேபாள் வீரர் என்ற சாதனையை திபேந்திர சிங் ஐரி படைத்துள்ளார். நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி, 2024 ஏசிசி பிரீமியர் கோப்பையில் கத்தாருக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்ததால், வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரை பொறித்துள்ளார்.