இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்று கைப்பற்றி தொடர்ந்து 17ஆவது முறையாக தொடரை வென்றுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று ராஜ்கோட்டில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தான் தொடரை தீர்மானிக்கும் 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 343 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி 307 ரன்கள் எடுத்தது. இதில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், ஜாக் கிராவ்லி மட்டுமே அதிகபட்சமாக 60 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து மொத்தமாக 191 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 55 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். அடுத்து வந்த ரஜத் படிதார் 0, ரவீந்திர ஜடேஜா 4 மற்றும் சர்ஃப்ராஸ் கான் 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் விளையாடிய கில், பஷீர் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையிருந்த நிலையில் ஜூரெல் ஒரு பவுண்டரி அடித்து கடைசியாக 2 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியாக இந்திய அணி 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி தொடர்ந்து 17ஆவது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்திய அணி 200 ரன்களுக்கும் குறைவான ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெறுவது 30ஆவது முறையாகும். மேலும், 3 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணி 150க்கும் அதிகமான ஸ்கோரை சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
தொடரை கைப்பற்றிய இந்தியா:
2-1(5) vs இங்கிலாந்து 1972/73
2-1(3) vs ஆஸ்திரேலியா 2000/01
2-1(3) vs இலங்கை 2015
2-1(4) vs ஆஸ்திரேலியா 2016/17
2-1(4) vs ஆஸ்திரேலியா 2020/21
3-1(4) vs இங்கிலாந்து 2020/21
3-1(4*) vs இங்கிலாந்து 2023/24
முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியில் வந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்தியாவில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் கொண்ட இங்கிலாந்து அணிக்கு இது 10ஆவது தோல்வியாகும். இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
A series win for the ages. Well played Team India 👏🏽 🇮🇳 So good to see the youngsters thrive under pressure 🙌🏽 pic.twitter.com/u0d5B3iswO
— Wasim Jaffer (@WasimJaffer14)