நான் ஏன் இந்தியா வரணும்..? நீ வேணும்னா பாகிஸ்தானுக்கு வந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோ!! முற்றும் அஃப்ரிடி - காம்பீர் மோதல்

By karthikeyan VFirst Published May 5, 2019, 11:41 AM IST
Highlights

தன்னுடைய சுயசரிதையில் காம்பீரை விமர்சித்ததற்காக தனக்கு பதிலடி கொடுத்திருந்த காம்பீருக்கு அஃப்ரிடியும் பதிலடி கொடுத்துள்ளார். அஃப்ரிடி - காம்பீரின் மோதல் முற்றுகிறது.
 

தன்னுடைய சுயசரிதையில் காம்பீரை விமர்சித்ததற்காக தனக்கு பதிலடி கொடுத்திருந்த காம்பீருக்கு அஃப்ரிடியும் பதிலடி கொடுத்துள்ளார். அஃப்ரிடி - காம்பீரின் மோதல் முற்றுகிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அந்த சுயசரிதையில் கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் அஃப்ரிடி தனது எதிரியாகவே பார்க்கும் காம்பீரை கடுமையாக சாடியிருந்தார். 

அஃப்ரிடியும் காம்பீரும் களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் முட்டி மோதுவதை வழக்கமாக கொண்டவர்கள். சமூக வலைதளங்களிலும் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2007ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அஃப்ரிடியும் காம்பீரும் மோதிக்கொண்டவது, களத்தில் நடந்த சண்டைகளில் முக்கியமான ஒன்று. 

காம்பீர் குறித்து எழுதியிருந்த அஃப்ரிடி, கிரிக்கெட்டில் குறிப்பிடும்படியான எந்தவொரு சாதனையும் செய்யாத காம்பீர், ஒரு சாதாரணமான வீரர் மட்டுமே. ஆனால் அவரது செயல்பாடுகள் மட்டும் திமிராக இருக்கும். அவருக்கு மனதுக்குள் பிராட்மேன் என்று நினைப்பு. தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு திமிராக நடந்துகொள்வார். 

2007 ஆசிய கோப்பை போட்டியில் நேராக என்னை நோக்கி ஓடிவந்து வேண்டுமென்றே என் மீது மோதினார். அப்போது இருவருமே மாறி மாறி திட்டிக்கொண்டோம். எனக்கு நேர்மறையான நபர்களை பிடிக்கும். ஆக்ரோஷமாகவோ போட்டி மனப்பான்மையுடனோ இருப்பதில் தவறில்லை; ஆனால் நேர்மறையான நபராக இருக்க வேண்டும். காம்பீர் அப்படிப்பட்டவர் அல்ல. காம்பீர் ஒரு சிடுமூஞ்சி என்று அஃப்ரிடி தாறுமாறாக விமர்சித்திருந்தார். 

இதையடுத்து அஃப்ரிடிக்கு காம்பீர் பதிலடி கொடுத்தார். எப்போதும் சிரிப்பு மூட்டுவதே உனக்கு வேலையா போச்சு.. மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு விசா வழங்குகிறது. எனவே இந்தியாவிற்கு வாருங்கள். நான் தனிப்பட்ட முறையில் உங்களை நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன் என்று காம்பீர் பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், காம்பீருக்கு மீண்டும் அஃப்ரிடி பதிலளித்துள்ளார். காம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ள அஃப்ரிடி, காம்பீருக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய மருத்துவமனைகளுடன் தொடர்பிருக்கிறது. இந்திய அரசாங்கம் அவ்வளவு எளிதாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்காது. ஆனால் பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தான் அரசும் இந்தியர்களை மகிழ்வுடன்  வரவேற்கிறோம். அதனால் காம்பீருக்கு நான் விசாவிற்கு ஏற்பாடு செய்கிறேன். இங்கு வந்து நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதற்கு கண்டிப்பாக காம்பீர் தரப்பிலிருந்து அடுத்த பதிலடி விரைவில் கொடுக்கப்படும். எனவே இவர்களின் மோதல் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.
 

click me!