Latest Videos

AFG vs BAN T20: நவீன் உல் ஹக் வேகத்தில் சரண்டரான வங்கதேசம் – வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

By Rsiva kumarFirst Published Jun 25, 2024, 12:07 PM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி செயிண்ட் வின்செண்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும். இதுவே வங்கதேசம் வெற்றி பெற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜத்ரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்மதுல்லா உமர்சாய் 10 ரன்னிலும், குல்பதீன் நைப் 4 ரன்னிலும் நடையை கட்டினர். முகமது நபி 1 ரன் எடுக்க தொடக்க வீரர் குர்பாஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த கரீம் ஜனத் 7 ரன்களும், ரஷீத் கான் 19 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் வங்கதேச அணியில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது மற்றும் முஷ்தாபிஜூர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு மழை குறுக்கீடு ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கப்பட்டது. எனினும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. பின்னர் எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் தன்ஷித் ஹசன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 5 ரன்னில் நடையை கட்டினார்.

இவரைத் தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹசன் கோல்டன் டக் முறையில் நடையை கட்டினார். சௌம்யா சர்கார் 10 ரன்னிலும், தவ்ஹித் ஹிரிடோய் 14 ரன்னில் நடையை கட்டினார். மஹ்முதுல்லா 6 ரன்னில் வெளியேறினார். இந்த நிலையில் தான் போட்டியின் 11.4ஆவது ஓவரின் போது மழை குறுக்கீடூ ஏற்பட்டது.

இதன் காரணமாக போட்டியானது 19 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. மேலும், வங்கதேசத்திற்கு 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது வங்கதேசம் 11 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் தேவையிருந்த நிலையில், வங்கதேச வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், பின்வரிசை வீரர்கள் வரிசையாக 0, 3, 2, 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே 105 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

click me!