ஒருநாள் போட்டியில் நூலிழையில் இரட்டை சதத்தை தவறவிட்ட ஃபின்ச்.. செம பேட்டிங்

By karthikeyan VFirst Published Oct 1, 2019, 1:45 PM IST
Highlights

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். அதுவும் சேஸிங்கில் இரட்டை சதம் என்பது பெரிய விஷயம். இரட்டை சதம் விளாசியிருந்தால் பெரிய சாதனையாக அமைந்திருக்கும். 

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. அதில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையே இன்று நடந்த போட்டியில் 305 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஃபின்ச்சின் அதிரடியான பேட்டிங்கால் 45வது ஓவரிலேயே எட்டி விக்டோரியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குயின்ஸ்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் ஹீஸ்லெட் ஆகிய இருவருமே நன்றாக ஆடினர். ஹீஸ்லெட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த போட்டியில் சதமடித்த உஸ்மான் கவாஜா, அபாரமாக ஆடி இந்த போட்டியிலும் சதமடித்தார். 112 ரன்களை குவித்து கவாஜா ஆட்டமிழந்தார். மேட் ரென்ஷாவும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 66 ரன்களை சேர்த்து கொடுத்தார். 50 ஓவர் முடிவில் குயின்ஸ்லாந்து அணி 304 ரன்களை குவித்தது. 

305 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய விக்டோரியா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச்சும் சாம் ஹார்ப்பெரும் அதிரடியாக தொடங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர். ஒரு ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்ஸர் என தொடர்ச்சியாக அடித்தனர். சாம் ஹார்ப்பெர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஃபின்ச்சுடன் மார்கஸ் ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை கடைசி வரை குயின்ஸ்லாந்து பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இவர்கள் இருவரும் இணைந்தே போட்டியை முடித்துவிட்டனர். இன்னிங்ஸின் இடையில் எந்த இடத்திலும் தடுமாறாமல், எந்த நேரத்திலும் அதிரடியை கைவிடாமல் தொடர்ந்து அடித்து ஆடினார். சதமடித்த ஃபின்ச், 150 ரன்களையும் கடந்தார். ஒரு கட்டத்தில் அவர் இரட்டை சதம் விளாச அருமையான வாய்ப்பு இருந்தது. 

ஆனால் மறுமுனையில் மார்கஸ் ஹாரிஸும் அடித்து ஆடி ஸ்கோர் செய்ததால், வெற்றிக்கு தேவைப்பட்ட ஸ்கோருக்கும் ஃபின்ச் இரட்டை சதம் அடிக்க தேவைப்பட்ட ரன்னுக்கும் இடையேயான வித்தியாசம் மிகக்குறைவாகிவிட்டது. மார்கஸ் ஹாரிஸூம் அரைசதம் அடித்தார். 45வது ஓவரிலேயே இலக்கை எட்டி விக்டோரியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஃபின்ச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 188 ரன்களை குவித்தார். மார்கஸ் ஹாரிஸ் 61 ரன்கள் அடித்தார். ஃபின்ச் ஜஸ்ட் மிஸ்ஸில் இரட்டை சதத்தை தவறவிட்டார். 
 

click me!