டெஸ்ட் அணியில் மீண்டும் அஷ்வின்.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Oct 1, 2019, 1:23 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாளை தொடங்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11வது டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் நமது ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால் இரண்டு ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்கள். புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி ஆகியோர் அடுத்தடுத்த வரிசைகளில் இறங்குவார்கள். விக்கெட் கீப்பராக அனுபவம் வாய்ந்த மற்றும் சர்வதேச அளவில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ரிதிமான் சஹா அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

ஸ்பின்னர்களாக அஷ்வினும் ஜடேஜாவும் எடுக்கப்பட்டுள்ளனர். இருவருமே பேட்டிங் ஆடுவார்கள். இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான அஷ்வினுக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கண்டிஷனில் பந்து பெரிதாக திரும்பாது என்பதால் ஜடேஜாவை மட்டும் எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த போட்டியில் அஷ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும் என்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்களுடன் தான் இந்திய அணி ஆடும். எனவே 7 பேட்ஸ்மேன்கள், 2 ஸ்பின்னர்கள் இருப்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பும்ரா இல்லாததால், இஷாந்த் சர்மாவும் ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர். உமேஷ் யாதவிற்கும் குல்தீப் யாதவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி. 
 

click me!