ஐசிசி அடிச்சது முரட்டு அடி; அந்த விதியை ஐபிஎல்லிலும் அமல்படுத்தணும்!அப்பதான் பயப்படுவாங்க- ஆகாஷ் சோப்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Jan 8, 2022, 6:05 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் பந்துவீச அதிக நேரம் எடுக்கும் அணிக்கு கடுமையான தண்டனையை ஐசிசி அமல்படுத்தியுள்ளது. அதை வெகுவாக பாராட்டிய ஆகாஷ் சோப்ரா, அதே விதியை ஐபிஎல்லிலும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த குறிப்பிட்ட அணி வீரர்களுக்கு ஐசிசி விதியில் 2.22 பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், அந்த அபராதத்துடன் சேர்த்து புதிய கடுமையான தண்டனையையும் சேர்த்து விதியை மாற்றியமைத்துள்ளது ஐசிசி. குறிப்பிட்ட நேரத்துக்குள் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசியிருக்க வேண்டும். அப்படி வீசவில்லை என்றால், அதன்பின்னர் வீசப்படும் 5 பந்துகளுக்கும் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே நிற்கும் ஃபீல்டர்களில் ஒருவரை 30 யார்டு வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும்.

பொதுவாக கடைசி ஓவரில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்தலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசவில்லை என்றால், கடைசி 5 பந்துகளுக்கும், 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருக்கும் ஒரு ஃபீல்டரை வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும். எனவே வட்டத்துக்கு வெளியே 4 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும். இது பேட்டிங் அணிக்கு அடித்து ஆட வசதியாக இருக்கும்.

எனவே குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசவில்லை என்றால் அது பவுலிங் அணிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பேட்டிங் அணிக்கு பெரும் பலமாக அமையும்.  இந்த புதிய விதி வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து இடையேயான டி20 தொடர் முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், ஐசிசியின் இந்த புதிய விதியை பாராட்டியுள்ள ஆகாஷ் சோப்ரா, இதை ஐபிஎல்லிலும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, பந்துவீச அதிக நேரம் எடுக்கும் அணிக்கு இதைவிட கடுமையான தண்டனை இருக்க முடியாது. ஐசிசி சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம், பந்துவீச அதிகநேரம் எடுக்கும் அணிக்கான தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது. இதற்கு பயந்துகொண்டே வீரர்கள் வேகமாக செயல்படுவார்கள். இந்த விதியை ஐபிஎல்லிலும் செயல்படுத்த வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
 

click me!