
2021ம் ஆண்டு நிறைய டெஸ்ட் போட்டிகள் நடந்தன. முதல் முறையாக நடத்தப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனல் இந்த ஆண்டுதான் நடந்தது. இந்நிலையில், 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இலங்கையின் திமுத் கருணரத்னே ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 3ம் வரிசையில் இங்கிலாந்து கேப்டனும், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ஜோ ரூட்டை தேர்வு செய்துள்ளார். ஜோ ரூட் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர் ஆகிய தொடர்களில் சதங்களாக விளாசி ஏகப்பட்ட ரன்களை குவித்தார். அதனால் ஜோ ரூட்டை 3ம் வரிசையில் தேர்வு செய்துள்ளார் சோப்ரா.
4ம் வரிசை வீரராக நியூசிலாந்து கேப்டனும், சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார். முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரிய வில்லியம்சனைத்தான் இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
5ம் வரிசையில் ஃபவாத் ஆலமையும், விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ள சோப்ரா, ஃபாஸ்ட் பவுலர்களாக கைல் ஜாமிசன், ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும், ஸ்பின்னர்களாக இந்தியாவின் அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்ஸர் படேல், அறிமுகமான ஆண்டிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எனவே அவரையும் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனில் ஒருவராக ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்தார்.
ஆகாஷ் சோப்ராவின் 2021ன் சிறந்த டெஸ்ட் லெவன்:
ரோஹித் சர்மா, திமுத் கருணரத்னே, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபவாத் ஆலம், ரிஷப் பண்ட், கைல் ஜாமிசன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷாஹீன் அஃப்ரிடி.