மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்

By karthikeyan VFirst Published May 21, 2020, 4:03 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல்டைம் மும்பை இந்தியன்ஸ் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கெத்தாக திகழ்வது மும்பை இந்தியன்ஸ் அணி. சிஎஸ்கே அணியைவிட ஒருமுறை கூடுதலாக டைட்டிலை வென்று சிங்கநடை போட்டுவருகிறது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 4 ஐபிஎல் டைட்டில்களுமே ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் வென்றதுதான். சச்சின், ஜெயசூரியா ஆகிய ஜாம்பவான்கள் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸில் ஆடியபோது கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல்டைம் மும்பை இந்தியன்ஸ் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிகப்பெரிய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜெயசூரியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் சோப்ரா. 

மூன்றாம் வரிசை வீரராக ரோஹித் சர்மவை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ரோஹித்தையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா தான் 4 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக சச்சினை விட ரோஹித் தான் அதிகமான வின்னிங் சராசரியை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் நான்காம் வரிசை வீரராகவும் விக்கெட் கீப்பராகவும், அம்பாதி ராயுடுவை சோப்ரா தேர்வு செய்துள்ளார். ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியில் 8 சீசன்கள் ஆடி, அந்த அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களாக அந்த அணியின் துணை கேப்டன் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா ஆகிய மூவரையும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, ஸ்பின்னராக ஹர்பஜன் சிங்கையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஜாகீர் கான், பும்ரா, மலிங்கா ஆகிய 3 மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்களையும் தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் மும்பை இந்தியன்ஸ் அணி:

சச்சின்  டெண்டுல்கர், சனத் ஜெயசூரியா, ரோஹித் சர்மா(கேப்டன்), அம்பாதி ராயுடு(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா, ஜாகீர் கான்.
 

click me!