
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், வரும் 16ம் தேதி இந்திய அணி மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்புகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் மிகவும் முக்கியமான தொடர் இது. ஆனால் இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் ஆடாதது இந்த தொடரில் இந்திய அணியின் பின்னடைவாக அமையும்.
ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷுப்மன் கில், ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. கேப்டன் விராட் கோலி பயோ பபுளில் இணையாததுடன், அவரை பிசிசிஐயால் கூட தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு செல்லமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஜடேஜா இல்லை, அக்ஸர் படேல் இல்லை, ராகுல் சாஹர் இல்லை, ஷுப்மன் கில்லும் இல்லை. இப்போது ரோஹித்தும் காயத்தால் விலகியுள்ளார். என்ன நடக்கிறது? தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிடலாமா? ரோஹித் சர்மா விலகியதுதான் பெரிய பின்னடைவு. ரோஹித் ஆடவில்லை என்றால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு சந்தேகம் தான். ஏனெனில் 2021ம் ஆண்டு டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய வீரர் ரோஹித் தான். ரோஹித் இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பி, ரசித்து ஆடுகிறார்.
ரோஹித், கில் ஆடவில்லை. கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் மட்டுமே தொடக்க வீரர்கள். 3வது ஓபனர் யார்? ரோஹித்தும் ஆடாததால் இந்திய அணி பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.