Ashes Series: ஏன் இவ்வளவு வடிகட்டுன முட்டாளா இருக்கீங்க..? இங்கிலாந்து அணியை செமயா விளாசிய முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Dec 14, 2021, 4:02 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணியை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் முன்னாள் கேப்டன் ஜெஃப் பாய்காட்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 147 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதம் (152) மற்றும் டேவிட் வார்னரின் சிறப்பான பேட்டிங்கால் (94) 425 ரன்களை குவித்தது.

258 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 20 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அந்த போட்டியில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. இந்த ஆண்டில் ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி அடையும் 7வது டெஸ்ட் தோல்வி இது. ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் தான்; ஆனால் அவர் கேப்டனுக்கு ஏற்ற நபர் கிடையாது என்பதே பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பலரது கருத்தாக உள்ளது. அது உண்மையும் கூட. விராட் கோலி, கேன் வில்லியம்சன் ஆகிய தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் கேப்டன்சிக்கு நிகராக ஜோ ரூட்டின் கேப்டன்சி இல்லை. அவர் வியூகங்கள், உத்திகள், அணுகுமுறைகள் சார்ந்த விஷயங்களில் கோட்டை விடுகிறார் ரூட்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அடைந்த படுதோல்வியையடுத்து, அந்த அணியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் ஜெஃப் பாய்காட்.

இதுகுறித்து பேசிய ஜெஃப் பாய்காட், ஹே ஜோ! இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனால் அதற்காக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என்பதில்லை. நீங்களும்(ஜோ ரூட்) உங்கள் அணியும் வார்த்தைகளால் பதில் சொல்லாமல் ஆட்டத்தின் மூலம் பதில் சொன்னால் நன்றாக இருக்கும். இங்கிலாந்து அணி செய்த தவறுகள் தோல்விக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜிம்மி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரையும் ஆடும் லெவனில் எடுக்கவில்லை என்றால் அவர்களை அணியில் மட்டும் எதற்கு எடுக்க வேண்டும்? அவர்கள் 2வது டெஸ்ட்டில் ஆடியாக வேண்டும். கேப்டனும் கோச்சும், ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லி பெருமை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சிறந்த பவுலர்கள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் ஃபிட்டாக இருந்தால் அவர்களை ஆடவைக்க வேண்டியதுதானே.. அவர்கள் தொடர்ந்து காயமடைந்து கொண்டே இருந்தால்  அது அணியை பாதிக்கும். 

ஜாக் லீச் கடைசியாக மார்ச் மாதம் இந்தியாவில் ஆடியதுதான். அதன்பின்னர் அவரை அணியில் எடுக்கவேயில்லை. இங்கிலாந்தில் ஆடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜாக் லீச்சை எடுக்கவில்லை. 9 மாதங்களாக ஆடாத வீரரை அணியில் எடுத்து திடீரென பிரிஸ்பேனில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அவர் 13 ஓவர்களில் 102 ரன்களை வழங்கினார். அது அவரது தவறல்ல. நாம்(இங்கிலாந்து அணி) ஏன் இவ்வளவு வடிகட்டிய முட்டாளாக இருக்கிறோம்? என்று மிகக்கடுமையாக இங்கிலாந்து அணியை விமர்சித்துள்ளார் ஜெஃப் பாய்காட்.
 

click me!