இந்திய அணியின் வெறித்தனமான ரசிகை இந்த பாட்டி.. உற்சாகப்படுத்திய மூதாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கி நெகிழ்ந்த கோலி, ரோஹித்

By karthikeyan VFirst Published Jul 3, 2019, 11:02 AM IST
Highlights

இந்திய அணி எந்த நாட்டில் ஆடினாலும் இந்திய ரசிகர்கள் அரங்கத்தை ஆட்கொள்வார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என உலகின் எந்த நாட்டில் ஆடினாலும், அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே பர்மிங்காமில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், ராகுலின் பொறுப்பான அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பின் காரணமாக 50 ஓவர் முடிவில் 314 ரன்களை குவித்தது. 315 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியை 286 ரன்களுக்கு சுருட்டி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்திய அணி எந்த நாட்டில் ஆடினாலும் இந்திய ரசிகர்கள் அரங்கத்தை ஆட்கொள்வார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என உலகின் எந்த நாட்டில் ஆடினாலும், அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். சொந்த நாட்டு அணிக்கே, நம் நாட்டில் தான் ஆடுகிறோமா அல்லது இந்தியாவில் ஆடுகிறோமா என்ற சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு ரசிகர்கள் குவிந்து, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள். 

அந்த வகையில் பர்மிங்காமில் நேற்று நடந்த போட்டியில் 87 வயது மூதாட்டி ஒருவர், கன்னத்தில் இந்திய கொடியை வரைந்துகொண்டு போட்டி முழுவதும் ஊதியை ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். 87 வயதிலும் அவரது நாட்டுப்பற்று மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 

போட்டி முடிந்ததும் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அந்த மூதாட்டியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினர். அந்த மூதாட்டி, விராட் கோலிக்கு பாசமாக முத்தமிட்டு தனது அன்பையும் ஆசிர்வாதத்தையும் வழங்கினார். 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலி, வயதான காலத்திலும் அந்த மூதாட்டியின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து வியப்பை வெளிப்படுத்தியதோடு, ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கு தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.

இவர் 1983ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அந்த போட்டியையும் நேரில் சென்று பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். 
 

click me!