உலக கோப்பை 2019: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

By karthikeyan VFirst Published Jul 2, 2019, 11:47 PM IST
Highlights

உலக கோப்பையில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
 

உலக கோப்பையில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. பர்மிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வழக்கமாக நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியை கையில் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார். அதன்பின்னர் 5வது ஓவரில் ரோஹித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமீம் இக்பால் தவறவிட, அதன்பின்னர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரோஹித், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார்.

ரோஹித் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, இந்த உலக கோப்பையில் தனது 4வது சதத்தை விளாசினார் ரோஹித். 29வது ஓவரிலேயே ரோஹித் சதமடித்ததால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 104 ரன்களிலேயே ஆட்டமிழந்தார் ரோஹித். ராகுலும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

34வது ஓவரிலேயே 200 ரன்களை இந்திய அணி எட்டிவிட்டதால் 350 ரன்களாவது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பிட்ச் ஸ்லோவானதால் கடைசி 10 ஓவர்களில் ஸ்கோர் செய்ய கடினமாக இருந்ததால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. இந்திய அணியின் ஸ்கோரை டெத் ஓவர்களில் உயர்த்தித்தரக்கூடிய ஹர்திக் பாண்டியா டக் அவுட்டானார். விராட் கோலி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட்டும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். தினேஷ் கார்த்திக்  ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தோனி ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும் அவரால் பெரிதாக அடிக்கமுடியவில்லை. அவரும் 35 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் எடுத்தது.

315 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பாலும் சௌமியா சர்க்காரும் சிறப்பாக ஆடி நன்றாக தொடங்கினர். ஆனாலும் தமீம் இக்பாலை 22 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. அதன்பின்னர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சௌமியா சர்க்காரும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஷகிப் அல் ஹசன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் என மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தது.

இந்த உலக கோப்பையில் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் ஷகிப் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்ததால் ஷகிப் மீது அழுத்தம் அதிகமானதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அடிக்க முயன்று ஹர்திக் பாண்டியாவின் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சைஃபுதினும் சபீர் ரஹ்மானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.

அவர்கள் இருவரும் இணைந்து ஆடும்போது வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் சபீர் ரஹ்மானை சரியான நேரத்தில் வீழ்த்தி பும்ரா பிரேக் கொடுத்தார். அதன்பின்னர் இந்திய அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் கூட சைஃபுதினும் ருபெலும் அடித்து ஆடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய சைஃபுதின் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவர்களில் வங்கதேச அணியின் வெற்றிக்கு வெறும் 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

48வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் இன்னிங்ஸை முடித்துவைத்தார். 286 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டானதை அடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
 

click me!