இனிமே இதுமாதிரி தப்பு பண்ண நினைக்கிறங்களுக்கு குலை நடுங்கணும்..! 3 இலங்கை வீரர்களுக்கு கடும் தண்டனை

By karthikeyan VFirst Published Aug 1, 2021, 3:31 PM IST
Highlights

இங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஒருநாள் தொடரையும் இழந்தது. இங்கிலாந்தில் ஒரு போட்டியில் கூட இலங்கை ஜெயிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த அணியின் 3 முக்கியமான வீரர்களான குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணதிலகா ஆகிய மூவரும் முழு தொடரிலும் ஆடாமல் பாதியில் இலங்கை திரும்பியதுதான். அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதற்கு காரணம், ஒழுங்கீன நடவடிக்கை ஆகும்.

கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. வீரர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் குசால் மெண்டிஸ், தனுஷா குணதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகிய இலங்கை அணியின் 3 முக்கியமான வீரர்களும் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றியதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்த வீரர்களின் பொறுப்பற்ற செயல், இலங்கை கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நான் மட்டும் அணியின் கேப்டனாக இருந்திருந்தால், அவர்கள் மூவரையும் 2-3 அறை அறைந்திருப்பேன் என்று முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரவிந்த டி சில்வா வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், டிக்வெல்லா, குணதிலகா, குசால் மெண்டிஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆட ஓராண்டும், உள்நாட்டு போட்டிகளில் ஆட 6 மாதங்களும் தடைவிதித்துள்ளது. மேலும் மூவருக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இனி இதுமாதிரியான விதிமீறல்களில் வீரர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக தடைவிதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

click me!