
மதுரை சித்திரை திருவிழாவில் அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் தஇருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28ம் தேதியான இன்று காலை நடந்து முடிந்துள்ளது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று சொன்னாலும் சுந்தரேஸ்வரருக்கு அருகில் இரண்டு அம்மன்கள் இருப்பார்கள். அதாவது சுந்தரேஸ்வருக்கு பக்கத்தில் ஒரு அம்மனும், தனியாக ஒரு அம்மனும் இருப்பார்கள். மீனாட்சி திருக்கல்யாணமாக இருந்தாலும் சுந்தரேஸ்வரர் தனக்கு பக்கத்திலேயே இருக்கும் பிரியாவிடை அம்மனுக்கு தான் முதலில் திருமாங்கல்யம் அணிவிப்பார். அதற்கு பிறகு தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிப்பார்.
சுந்தரேஸ்வரருடன் இருக்கும் இந்த பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. வெறுமனே ஒரு சிலையாக அல்லாமல், மதுரையின் ஆன்மீக வாழ்வியலில் ஒரு அங்கமாக விளங்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் பற்றி இதுவரை பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
யார் இந்தப் பிரியாவிடை?
மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், சுவாமி சன்னதிக்குச் சென்றால் அங்கே சொக்கநாதப் பெருமானுடன் எப்போதும் பிரியாமல் வீற்றிருக்கும் ஒரு தேவியைக் காணலாம். இவரே பிரியாவிடை அம்மன். பெயரிலேயே அதன் அர்த்தம் பொதிந்துள்ளது. "பிரிவு + விடை" - அதாவது இறைவனை விட்டு ஒருபோதும் பிரியாதவள் என்று பொருள். பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.
இதுவரை அறியாத அரிய தகவல்கள் :
1. திருமணக் கோலத்தின் சாட்சி :
மதுரையில் மீனாட்சி - சொக்கநாதர் திருமணம் நடந்த பிறகு, அன்னை மீனாட்சி அரசியாக மதுரையை ஆளுகிறார். ஆனால், சொக்கநாதர் சிவகாமியாகவோ அல்லது பார்வதியாகவோ அல்லாமல், தன் இடப்பாகத்தில் பிரியாவிடை அம்மனைத் தாங்கி நிற்கிறார். இது இறைவனின் நித்திய கல்யாணக் கோலத்தைக் குறிக்கிறது. மீனாட்சி அரசியாக ஆட்சி செய்யும் போது, இல்லத்தரசியாக இறைவனுக்கு அருகிலேயே இருப்பவர் இந்தப் பிரியாவிடை அம்மன்.
2. கருவறையில் இருக்கும் ரகசியம் அம்மன்:
மதுரை கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்குத் தனிச் சன்னதி உண்டு. ஆனால், சொக்கநாதர் கருவறைக்குள்ளேயே சுவாமிக்கு இடப்பக்கத்தில் பிரியாவிடை அம்மன் சிறிய உருவமாக எழுந்தருளியிருப்பார்."அரசியாக அன்னை மீனாட்சி வெளிப்படையாக அருள்பாலிக்க, அந்தரங்கத் துணையாகவும், சக்தியாகவும் பிரியாவிடை அம்மன் இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்" என்பது ஐதீகம்.
3. திருவிழாக்களின் நாயகி :
மதுரை சித்திரைத் திருவிழா போன்ற பெரிய உற்சவங்களின் போது, சுவாமி புறப்படும் போது மீனாட்சி அம்மன் தனியாக ஒரு வாகனத்திலும், சொக்கநாதர் மற்றொரு வாகனத்தில் பிரியாவிடை அம்மனுடனும் வருவார்கள். சுவாமி எங்கு சென்றாலும் அவரை விட்டுப் பிரியாமல் நிழல் போலத் தொடர்வதால் தான் இவருக்கு இந்தப் பெயர் வந்தது.
4. வேறு எங்கும் காண முடியாத திருக்கோலம் :
பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் சாமி தனி சன்னதியிலும், அம்பாள் தனி சன்னதியிலும் காட்சி தருவார்கள். அரிதாக சில ஆலயங்களில் அம்பாளும், சாமியும் ஒரே கருவறையில் காட்சி தருவார்கள். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டுமே மீனாட்சி தனி சன்னதியில் வீற்றிருக்க, அவளின் அம்சமாக பிரியாவிடை அம்மன் சொக்கநாதருடன் தனி சன்னதியிலும் காட்சி தருவதை காண முடியும். சாமி சன்னதியில் பிரியாவிடை அம்மன் உடன் இருப்பது பலருக்கு தெரியாத ரகசியம். ஆனால் மூலஸ்தானம், உற்சவம், வீதிஉலா என எந்த சமயத்தில் சொக்கநாதரை பிரியாமல் பிரியாவிடை அம்மன் கூடவே இருப்பாள். சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்ற ஆழ்ந்த ஆன்மீக தத்துவத்தை உணர்த்துவதே இந்த திருக்கோலத்தின் சிறப்பு அம்சமாகும்.
ஆன்மீகத் தத்துவம்:
பிரியாவிடை அம்மன் நமக்கு உணர்த்தும் தத்துவம் மிக அழகானது. கணவன் - மனைவி உறவில் ஒருவருக்கொருவர் துணையாக, பிரியாமல் இருக்க வேண்டும் என்பதையே இந்தப் பிம்பம் காட்டுகிறது. இறைவனை விட்டுப் பிரியாத உயிருக்கு என்றும் அழிவில்லை என்ற பூரண சரணாகதி தத்துவத்தையும் உணர்த்தக் கூடியவள் இந்த பிரியாவிடை அம்மன்.இறைவன் இயங்குவதற்கு ஆதாரமான சக்தியாகப் பிரியாவிடை அம்மன் விளங்குகிறார்.
இதை கவனிச்சிருக்கீங்களா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் போது, சொக்கநாதர் சன்னதியில் தீபாராதனை காட்டப்படும் போது கவனமாகப் பாருங்கள். சுவாமியின் இடப்பக்கம் மிகச்சிறிய வடிவில் பிரியாவிடை அம்மன் காட்சி தருவாள். ஜொலிக்கும் அந்தப் பிரியாவிடை அம்மனை வணங்கினால்,குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை. மதுரையில் மீனாட்சிக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், சுவாமியுடன் பிரியாமல் இருக்கும் இந்த அன்னைக்கும் உண்டு. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கூட முதலில் பிரியாவிடை அம்மனுக்கு தான் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகு தான் கையில் கிளியுடன் தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் இணையவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கவும் பிரியாவிடை அம்மனை மனதார வேண்டிக் கொள்வது ஒரு சிறந்த ஆன்மீகப் பரிகாரமாகக் கருதப்படுகிறது.