
மதுரை சித்திரை திருவிழா என்றாலே நம் நினைவுக்கு வருவது பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோலம் தான். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என முழக்கமிட, தங்கக் குதிரை வாகனத்தில் வரும் அழகர் மீது தோல் பைகளில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். இதை வெறும் வேடிக்கையாகவோ அல்லது கோடை வெயிலுக்கான தீர்வாகவோ நாம் பார்த்திருக்கலாம். ஆனால், இந்த மரபு உருவானதற்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான வரலாறும், பலரும் அறியாத ஆன்மீக ரகசியமும் ஒளிந்துள்ளன.
துர்வாசரின் சாபமும் தவளை அவதாரமும் :
இந்த நீர் பீய்ச்சும் படலத்தின் பின்னணியில் மண்டூக மகரிஷி என்பவரின் கதை இருக்கிறது. துர்வாச முனிவரின் சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷி, வைகை ஆற்றின் கரையில் விஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருக்கு சாப விமோசனம் அளிக்கவே அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்கிறார். தவளை என்பது நீரிலேயே வாழும் உயிரினம். தன் பக்தனான மண்டூக மகரிஷியின் சாப வெப்பத்தைத் தணிக்கவும், அவர் குளிர்ந்து போய் மோட்சம் பெறவும் அந்தக் காலத்தில் மக்கள் நீரினை இறைவர் மீது தெளித்ததாகக் கூறப்படுகிறது.
கள்ளழகர் எந்த நிறத்தில் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதைப் பொருத்து அந்த ஆண்டின் விவசாயம், வளமை இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அது போலவே கோடை வெயில் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் பாசமுடன் பீய்ச்சி அடிக்கும் தண்ணீரால் மனம் குளிர்ந்து, வைகை ஆற்றில் மகிழ்ச்சியுடன் கள்ளழகர் இறங்கினால் அந்த ஆண்டு மக்கள் மனம் குளிரும் வகையில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் காணப்படுகிறது.
புராணக் கதை :
கள்ளழகர் (மாலிருஞ்சோலை அழகர்) தனது தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வருகிறார். ஆனால், அவர் மதுரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, அவர் கோபமடைந்து வைகை ஆற்றுக்குள் இறங்காமல், அக்கரையில் உள்ள ராமராயர் மண்டகப்படிக்குச் செல்கிறார். அந்த கோபத்தைத் தணிக்கவும், அவரைச் சாந்தப்படுத்தவும் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறார்கள் என ஒரு கதை கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான 'தோல் பை' ரகசியம் :
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (வீரபத்திர கோத்திரத்தினர்). இவர்கள் இதற்காக ஆட்டுத்தோலால் ஆன பைகளைப் பயன்படுத்துகிறார்கள். முன்பு கள்ளழகர் வரும் பாதையில் கள்ளர்கள் மற்றும் வழிப்பறி திருடர்களின் நடமாட்டம் அதிகம் இருக்குமாம். அழகரை அவர்கள் நெருங்க விடாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல் தெய்வத்தின் அம்சமாகத் தண்ணீர் பீய்ச்சும் இந்த முறை உருவானது என்றும் சொல்லப்படுகிறது. இது பலரும் அறியாத கள்ளழகர் பற்றிய ரகசியங்களில் ஒன்று.
ஏன் தண்ணீர் பீய்ச்சுகிறார்கள்? ஆன்மீகக் காரணம் :
அந்த காலத்தில் வெறும் தண்ணீரை மட்டும் அடிக்க மாட்டார்கள். தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் வாசனை திரவியங்களைக் கலந்து "சர்க்கரைத் தண்ணீராக" அடிக்கும் வழக்கம் இருந்தது. இது அழகருக்குச் செய்யப்படும் ஒருவகை நைவேத்தியமாகக் கருதப்பட்டது. அழகர் மலையிலிருந்து வெயிலில் நடந்து வரும் இறைவனின் உடல் சூட்டைத் தணிக்க, தன் பிள்ளைகள் செய்யும் அன்பான உபசாரமே இந்த நீர் பீய்ச்சும் நிகழ்வு கருதப்படுகிறது. கள்ளழகரை 'மலை கள்ளன்' என்று அழைப்பார்கள். திருப்பதி வேங்கடாஜலபதியே இங்கு அழகராக வருவதாக ஐதீகம். வேங்கடவனுக்கு எப்படி அபிஷேகம் பிரியமோ, அதே போல் கள்ளழகருக்கு இந்த நீர் விளையாட்டு பிரியம்.
இன்றைய சூழலில் ஒரு மாற்றம் :
முன்பு தோல் பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு குழாய் மூலம் பீய்ச்சி அடித்தார்கள். ஆனால் தற்போது பலர் ‘பிரஷர் பம்ப்’ மூலம் அதிக வேகத்தில் தண்ணீர் அடிக்கிறார்கள். இது இறைவனின் திருமேனியைப் பாதிக்கும் என்பதால், பழைய முறைப்படி நிதானமாக, அன்புடன் நீர் தெளிப்பதே உண்மையான பக்தியாகும். சமீப காலமாக பழங்கால முறையை பின்பற்றி கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் முறை மீண்டும் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக வேண்டிக் கொண்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வழக்கத்தை செய்து வருகின்றனர்.