Meenakshi thirukalyanam 2026 அழகர் வரல...அப்போ மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தது யார்?

Published : Apr 28, 2026, 12:50 PM IST
meenakshi thirukalyanam 2026

சுருக்கம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம். மீனாட்சி திருக்கல்யாணத்தை மதுரை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கல்யாண விருந்து, மீனாட்சிக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறும் போது பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது போன்றவை அனைவரும் அறிந்த விஷயங்கள் தான்.

வழக்கமாக இந்துக்களின் திருமண சடங்குகளில் கன்னிகா தானம் என்று ஒரு சடங்கு நடத்தப்படுவது வழக்கம். அதாவது, மணப்பெண்ணை பெற்ற தந்தை, தன்னுடைய குலத்தின் சொத்தான தனது மகளை, மாப்பிள்ளையிடம் ஒப்படைப்பது. மாப்பிள்ளையின் கைக்கு மேல் மணப்பெண்ணின் கைகளை வைத்து, அவர்களின் கைகளில் தண்ணீர் ஊற்றி, தானமாக கொடுப்பார்கள். தானங்களில் மிக உயர்ந்த தானமாக சொல்லப்படும் விஷயங்களில் கன்னிகா தானமும் ஒன்று என இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தது யார்?

இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண் பெற்ற தந்தை இல்லை என்றால் அவருடைய இடத்தில் இருந்து, அந்த பெண்ணுடன் பிறந்த அண்ணன், திருமணத்தின் போது கன்னிகா தானம் அல்லது தாரை வார்த்து கொடுப்பார். உலகிற்கே தாய்-தந்தையாக விளங்கும் பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கு நடைபெறும் திருமணத்தில் யார் கன்னிகா தானம் செய்து வைப்பது என்ற கேள்வி வரும். தெய்வங்களாகவே இருந்தாலும் அவர்களும் சாஸ்திர விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற உன்னதமான தத்துவத்தை மனிதகுலத்திற்கு எடுத்துக் காட்டும் பல விஷயங்கள் மதுரை மீனாட்சி அம்மன் திருமண வைபவத்தில் காண முடியும்.

தன்னையே வழிபடும் சிவன் :

அன்னை மீனாட்சிக்கு அண்ணனாக இருந்து பெருமாள், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுப்பார். மனிதர்களின் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் நடத்தப்படுமோ, அவை அனைத்தும் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திலும் நடைபெறும். அதே போல், ஒரு நாட்டின் அரசனாக முடி சூடிக் கொள்வதற்கு முன், அந்த அரசன் தனது மனைவியுடன் இணைந்து, தம்பதி சமேதராக சிவ பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அந்த நியதிக்கு கட்டுப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்த கையோடு, அன்னை மீனாட்சியும்- சுந்தரேஸ்வரரும் மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் தலத்திற்கு எழுந்தருள்வார்கள். இங்கு தான் சிவபெருமான், தனது கைகளால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தன்னை தானே பூஜை வழிபடுவார். அதற்கு பிறகே மதுரையின் அரசனாக சுந்தரேஸ்வரர் முடிசூட்டிக் கொள்வார். மதுரையில் முதல் 4 மாதங்கள் மீனாட்சி ஆட்சியும், அடுத்த 8 மாதங்கள் சொக்கநாதர் ஆட்சியும் நடைபெறும் என்பது ஐதீகம்.

தங்கை திருமணத்திற்கு வராத பெருமாள்:

புராண கதைகளின் படி, தங்கை மீனாட்சியின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக பெருமாள் பூமிக்கு வருவார். அப்போது கள்ளர்கள் அழித்த உபசாரத்தை ஏற்ற மயக்கத்தில் அழகர்மலையிலேயே அவர் தங்கி விடுவார். திருமண முகூர்த்தத்திற்கு நேரமாகி விட்டதே என்ற நினைவு வந்து, மதுரையை நோக்கி பெருமாள் வருவதற்குள் மீனாட்சி திருமணம் முடிந்து விடும். இதனால் கோபம் கொண்ட கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி, மதுரை நகருக்குள் வராமலேயே திரும்பி சென்று விடுவார். மீனாட்சி கல்யாணத்திற்கு அழகர் வரவில்லை என்றால், அப்படியானால் திருமண பந்தலில் சிவபெருமானுக்கு, மீனாட்சியை தாரை வார்த்து கொடுப்பது யார்? என்ற கேள்வி தோன்றும்.

பலரும் அறியாத சிவனின் திருவிளையாடல் :

முகூர்த்தத்திற்கு நேரம் நெருங்குகிறது. ஆனாலும் அண்ணன் அழகர் வரவில்லை. அன்னை மீனாட்சி பதற்றத்துடன் இருப்பதை உணர்ந்த சிவ பெருமானின், தனது சக்தியின் மூலம் அழகிய பெருமாளை உருவாக்கினார். இவர் தான் மீனாட்சி - சொக்கநாதர் திருமணத்தின் போது தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைப்பார். தான் வருவதற்கு தங்கையின் திருமணம் முடிந்து விட்டதால் பாதி வழியிலேயே கோபத்துடன் திரும்பிய பெருமாள், சுந்தரராஜ பெருமாளாக அழகர்மலையில் வீற்றிருக்கிறார். சிவனின் அம்சமாக தோன்றிய பெருமாளுக்கு, பவளக்கனிவாய் பெருமாள் என்று பெயர். இந்த பெருமாளை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் சிவனின் சன்னதிக்கு அருகில் தரிசனம் செய்ய முடியும்.

நேருக்கு நேர் காட்சி தரும் சிவனும் பெருமாளும் :

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகப் பெருமானுடன் சேர்த்து 5 மூல மூர்த்திகளை தரிசிக்க முடியும். இவர்களில் பவளக்கனிவாய் பெருமாளும் ஒருவர். வழக்கமாக சிவன் சன்னதிக்கு முன் நந்தி தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் சன்னதிக்கு எதிராக பெருமாளின் சன்னதி இருக்கும். சிவனின் சக்தியில் இருந்து தோன்றிய பெருமாள் என்பதாலும், சிவனும்-பெருமாளும் ஒன்றே என்பதை காட்டுவதற்காகவும் இருவரும் நேர் எதிராக காட்சி தருவார்கள். ஒவ்வொரு வருடமும் மதுரை சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி திருக்கல்யாணத்தன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு எழுந்தருளி, திருக்கல்யாண வைபவத்தை முன்னின்று நடத்தி வைக்கும் வழக்கும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vastu Tips: மக்களே, பெட்ரூம்ல இந்த 3 பொருட்களை மறந்தும் வெக்காதீங்க!
Madurai chithirai thiruvizha 2026 கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?