
மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறப்பு வாய்ந்த மாதம். அண்மையில் கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரிக்கு அடுத்த முக்கிய தினமாக வருகிறது மாசி மகம். பௌர்ணமி திதியுடன் இணைந்து வரும் மகம் நட்சத்திர தினத்தையே 'மாசி மகம்' என அழைக்கிறோம். ஏனென்றால் அன்றைய தினத்தில் கடல், குளம், ஆறு ஆகியவற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை கலந்திருக்கும் என்பது காலங்காலமாக வரும் நம்பப்பட்டு வரும் ஐதீகம். அப்படி மாசி மகம் வரும்போது புனித நீராடுவது நம்முடைய 7 ஜென்ம பாவங்களை கூட நீக்குமாம். இதையொட்டி மிக சிறப்பாக 12 வருடங்களுக்கு ஒருதடவை கும்பகோணத்தில் மகாமகம் நடத்துவார்கள்.
புராணத்தில் மாசி மகம்
பார்வதி தேவி, தக்கனின் மகளாக அவதரித்த தினம் மாசிமகம் என புராணம் கூறுகின்றன. சிவனின் சக்தியான தேவியே, தன் மகளாக வந்து பிறக்க தக்கனிடம் பேராவலும் ஆசையும் இருந்தது. சிவனிடம் மனமுருகி தவம் இருந்தான். அதன் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக பிறந்தாள். அவர்களுக்கு ‘தாட்சாயிணி' என பெயர் வைத்து பாசம் வைத்து வளர்த்தார் தக்கன். பின்னர் சிவபெருமானுக்கே தன் மகளை மணமுடித்து வைத்தார். இப்படி உமா தேவி அவதரித்த தினம் மாசி மகம் என்பதால் புனிதமாக கருதப்படுகிறது.
புனித நீராடல் ஏன்?
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்ட வருண பகவான், உடல் கட்டப்பட்டு கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது வருணன், சிவபெருமானை வேண்டி கொண்டார். அப்போது உலகில் மழையே பொழியாமல் வறட்சியும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. அப்போது தேவர்கள் சிவனிடம் முறையிட, அந்த கோரிக்கையை ஏற்று வருணனை விடுவித்தார் சிவன்.
விடுதலை அடைந்த வருண பகவான் மகிழ்ச்சியில் சிவபெருமான் அடிபணிந்தார். தன்னை போல் மாசி மகத் தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பக்தர்களுக்கு பாவம் போக்க வேண்டும் என சிவனிடம் வேண்டிக் கொண்டார். அந்த வரத்தை சிவனும் கொடுத்தார். அப்போது தொடங்கி மாசி மகம் அன்று தீர்த்தமாடல் நிகழ்ச்சி தொடங்கியது. மாசிமகத் தன்று கோயிலில் உள்ள புண்ணிய தலங்களான ஆறு, கடல், குளம் ஆகியவற்றில் நீராட வேண்டும். அப்படி செய்வதால் சகல தோஷங்களும் விலகும். நம்முடைய குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும்.
மாசி மகம் எப்போது?
இந்தாண்டு மாசி மகம் மார்ச் 06 ஆம் தேதி வருகிறது. தமிழ் மாதத்தில் மாசி 22 ஆம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரம் மார்ச் 05ஆம் தேதி அன்று இரவு 09.30 மணிக்கு தொடங்கும். மார்ச் 07 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.05 மணி வரை இருக்கிறது. பௌர்ணமி திதியோ மார்ச் 06 ஆம் தேதி அன்று மாலை 05.39 தொடங்கி மார்ச் 07ஆம் தேதி இரவு 07.14 மணி வரை நீடிக்கிறது.
இதையும் படிங்க: மார்ச் மாதத்தில் வரும் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. விசேஷங்களை தவறவிடாதீங்க..!
விரதமும், பலன்களும்..!
மாசி மகம் அன்று வழக்கம்போல அதிகாலையில் எழும்பி புண்ணிய தீர்த்தங்களில் நீராடால் செய்ய வேண்டும். அடுத்ததாக நல்ல உலர்ந்த உடைகளை உடுத்தி கொண்டு சிவ சிந்தனைகளை மனதில் ஏற்றி கொள்ள வேண்டும். பின் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று மதியம் ஒரு வேளை தான் உணவு உண்ணவேண்டும். இரவில் பால், பழம் ஆகியவை உண்ணலாம். விரதம் இருப்பதால் மற்ற பணிகளை செய்யாமல் கடவுளை நினைக்கும் சிந்தனையோடு மட்டுமே இருப்பது முக்கியம். தேவாரம் திருவாசகம் ஆகியவற்றில் உள்ள பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். இப்படி விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கூட கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!