அஷ்டமி நாளில் நல்ல காரியங்களை செய்யக் கூடாது என சொல்வதற்கான காரணங்களை காணலாம்.
அஷ்டமி பைரவரை வழிபடும் நாளாகும். நினைத்த காரியம் நிறைவேற வளர்பிறை அஷ்டமியில் கால பைரவர் (அ) சொர்ண பைரவரை வழிபாடு செய்யலாம். இந்த தினத்தில் நல்ல காரியங்கள் செய்வதை பெரும்பாலான இந்து மக்கள் தவிர்த்து விடுவர். இதற்கு முன்னோர்கள் விளக்கமும் கொடுத்துவைத்துள்ளனர். அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு நாள்களிலும் சுப காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த இருநாள்களிலும் சுபகாரியமே செய்யக்கூடாது.
சக்தி வாய்ந்த அஷ்டமி திதி
ஆனால் உண்மையில் அஷ்டமி திதி ரொம்ப சக்தி வாய்ந்த நாள் ஆகும். இந்த தினத்தில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் எந்த துன்பமாக இருந்தாலும் சிட்டாக பறந்துவிடும். இவ்வளவு சக்தி வாய்ந்ததாக சொல்லப்பட்டாலும் அஷ்டமிக்கு சுபகாரியங்கள் ஏன் செய்யக் கூடாது என முன்னோர் சொல்கிறார்கள் என்ற கேள்வி மனதில் வராமல் இருக்காது.
அஷ்டமியில் ஏன் சுபகாரியங்கள் கூடாது..?
கோபியர் கொஞ்சும் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் அஷ்டமி தினத்தை கோகுலாஷ்டமி என அழைக்கிறோம். ராமர் பிறந்த நவமி தினத்தை ராமநவமி என அழைக்கிறோம். இப்படி பார்த்தால் அஷ்டமி, நவமியை கொண்டாடதானே வேண்டும், அன்றைய தினத்தை கொண்டாடாமல் ஏன் சுபகாரியங்களை தள்ளி வைக்கிறார்கள், அஷ்டமியில் ஏன் புதியதாக எந்த காரியமும் தொடங்க வேண்டாம் என்கிறார்கள், இதற்கெல்லாம் முழு விளக்கம் இங்கு காணலாம்.
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா ஜீவராசிகளுமே அத்தியாவசியமாக உண்வையும், உறைவிடத்தையும் கொண்டுள்ளன. அதில் மனிதனுக்கு தான் உணவு, உடை உள்ளிட்ட எல்லா செல்வங்களும் தேவைப்படுகின்றன. இந்த செல்வங்களையும், ஐஸ்வரியத்தையும் அள்ளி தருபவர்கள் அஷ்டலட்சுமிகள் தான். எல்லாவற்றிற்கும் லட்சுமி கடாட்சம் தான் இருக்க வேண்டும் என ஆன்மீக பெரியோர் கூட சொல்வர்.
லட்சுமி தேவி என்றாலே செல்வம் தான் நம் கண் முன் வரும். ஆனால் உண்மையில் மகாலட்சுமி மட்டுமல்ல, அவளோடு சேர்த்து எட்டு லட்சுமிகள் அருள் பாலிக்கின்றனர். தைரியம், தானியம், சந்தானம் உள்ளிட்ட மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான 16 வகையான செல்வங்களையும் அந்த எட்டு லட்சுமிகள் தான் அருளுகின்றனர்.
லட்சுமிகளின் அருள்
தைரிய லட்சுமி உங்களுடன் இருந்தால் பிற லட்சுமிகளும் உங்களுடன் தன்னிச்சையாக தேடி வந்து சேர்வார்கள். 16 வகை செலவங்களை அருளும் இந்த எட்டு லட்சுமிகளும் சிவ ரூபமான சொர்ண பைரவரிடம் அருளை வாங்கி, அப்படி கிடைத்த ஆற்றலை உலக உயிருக்கு அளிக்கின்றனர். இந்த அஷ்ட லட்சுமிகளும், அஷ்டமி திதியில் தான் பைரவரை வழிபட்டு பூஜை மேற்கொண்டு தங்கள் சக்திகளை கூட்டி கொள்வெகள். அவர்கள் அஷ்டமியில் சக்தியை பெருக்கி கொள்வதாக நம்பப்பட்டுவருகிறது. அஷ்ட லட்மிகளில் அருள் பெருகும் நாள் தான் அஷ்டமி.
அஷ்டலட்சுமிகள் எல்லோரும் பைரவர் வழிபாட்டில் ஈடுபடுவதால், அஷ்டமி அன்று செய்யப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 8 லட்சுமிகளும் அருள் கொடுக்க முடியாதாம். அஷ்டலட்சுமிகள் அருள் கிடைக்காமல் போனால் அந்த காரியம் எப்படி விருத்தியாகும். ஆகவே தான் அஷ்டமி திதி அன்று சுப காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
அஷ்டமி நாள் அன்று பைரவர் வழிபாடு செய்தால் எல்லா ஐஸ்வரியமும் கிடைக்கும். தீயசக்திகள் கூட விரட்டியடிக்கப்படும். நம் வாழ்வில் நல்லது பெருக தேய்பிறையை காட்டிலுன் வளர்பிறைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படி வளர்பிறையில் வரும் அஷ்டமி தினங்களில் பைரவரை வழிபாடு செய்யலாம். அதனால் பாவங்கள் ஒழிந்து தீமைகள் அடியோடு அழிந்து நல்லதே கிடைக்கும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர்.