கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம்.. மனதார வேண்டி நாம் படைத்ததை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது?

By Ma Riya  |  First Published Feb 25, 2023, 2:37 PM IST

கடவுளுக்கு நாம் படைக்கும் நைவேத்தியத்தை அவர் ஏற்று கொள்கிறார் என்பதை எப்படி அறிவது என இங்கு காணலாம். 


நாம் வணங்கும் கடவுளின் மனம் குளிர அவ்வப்போது விரதமிருந்து வழிபடுவோம். அந்த சமயங்களில் அவருக்கு நைவேத்தியத்தை படைத்து அவர் முன் மனமுருகுவோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதிரியான நைவேத்தியம் உண்டு. எந்த கடவுளுக்கு எந்த நெய்வேத்தியம் அளிக்க வேண்டும் என்பதை அறிந்து தான் நாம் பூஜையே செய்கிறோம். ஆனால் பூஜை முடிந்த பிறகும் நாம் வைத்த நைவேத்தியம் குறையாமல் வைத்த மாதிரியே இருப்பது சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். 

கடவுள் அந்த நைவேத்தியத்தை ஏற்று கொண்டாரா என மனமும் அலைபாயும். பூஜையில் பிரதானமான பங்கை பெறுவது நைவேத்தியம் தான். பொங்கல், கற்கண்டு வாழைப்பழம் என ஒவ்வொரு கடவுளுக்கும் விருப்பமான நைவேத்தியங்களும் உண்டு. வீட்டில், கோயிலில் என இறைவனுக்கு நைவேத்தியம் தயாரிக்க குறிப்பிட்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

நைவேத்தியம் செய்யும் முறை 

கோயில்களில் நைவேத்தியம் தயாரிக்க மடப்பள்ளி இருக்கும். இங்கு நைவேத்தியம் செய்யும் ஆட்கள் எப்போது எழுவது, குளிப்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உண்டு. இவர்களுக்கு நைவேத்தியத்திற்கு எந்த அளவில் பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பதும், சமைத்த உணவை எப்படி பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கும். இறைவனுக்கு என உணவை நைவேத்தியமாக படைத்த பின் அந்த உணவை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் ஒருமுறை உண்டு. வீடுகளில் செய்வோரும் சுத்தமாக எப்படி நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பதை பெரியோர் கற்று கொடுத்திருப்பார்கள். ஆனால் நைவேத்தியம் செய்வதை விடவும், அதை இறைவன் ஏற்று கொண்டாரா என்பதே அனைவர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி. 

இதையும் படிங்க: குண்டுமணி தங்கம் கூட இல்லாம வருத்தமா.. இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்தால்..கணக்கு தெரியாத அளவிற்கு நகை சேரும்

இறைவன் உண்மையில் நைவேத்தியத்தை ஏற்கிறாரா?

ஒவ்வொரு கடவுளுக்கும் என்ன நைவேத்தியம் விருப்பம் என அறிந்து, அந்தந்த பூஜை நாளில் நைவேத்தியம் கவனமாக செய்வோம். விருந்தாளிகளுக்கே அன்பாக பரிமாறும் நாம், இறைவனுக்கு எவ்வளவு மெனக்கெடலுடன் நைவேத்தியம் தயார் செய்கிறோம். இருந்தாலும் கடவுள் முன் படைத்த நைவேத்தியம் கொஞ்சம் கூட அளவு குறையாமல் இருப்பதை காணும்போது, அதை கடவுள் உண்மையில் ஏற்றாரா? இல்லையா என்ற கேள்வி மனதை அரிக்கும். இனி குழம்ப வேண்டாம், அதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  

இந்த கேள்வியை ஒரு குட்டி கதை மூலம் தான் விளங்கி கொள்ள முடியும். இந்தப் பதிவினை முழுமையாக படியுங்கள். குருகுலத்தில் இருந்த குரு, தன் மாணவர்களுக்கு நைவேத்தியம் பற்றி சொன்ன பாடம் தான் இக்கதை. அவர் பாடம் நடத்தி முடித்ததும் மாணவர்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் வர, அவரிடம் விளக்கம் கேட்டனர். குருவும் பொறுமையாம விளக்கம் அளித்து கொண்டிருந்தார். ஒரு மாணவன் மட்டும், குருவிடம் நாம் அரும்பாடுபட்டு விரதமிருந்து கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கிறோமே குருவே, அதை இறைவன் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது என்றானாம் மாணவன். கடவுள் நம் நைவேத்தியத்தை ஏற்று கொண்டால் அதை இறைவன் உண்பார் என எடுத்துக் கொள்ளலாமா? என குருவிடம் மாணவன் கேட்க, குரு பொறுமையாக விளக்கினாராம். 

குரு சொன்ன டாஸ்க்.. 

கேள்வி கேட்ட மாணவனிடம் நூலகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து வர சொல்லியிருக்கிறார். மாணவன் அதை எடுத்து வர, முழு புத்தகத்தையும் படித்துவிட்டு வந்தால், உன் சந்தேகத்தை தீர்க்கிறேன் என குரு சொல்லிவிட்டாராம். இதை புரிந்து கொண்டு மாணவனும் இரவெல்லாம் கண் விழித்து அந்த பெரிய புத்தகத்தை படித்து முடித்துவிட்டு அவரிடம் வந்திருக்கிறான். குரு அவனை நோக்கி, புத்தகத்தை முழுவதும் நீ படித்தாய் என்பதை நான் எப்படி நம்ப என கேட்க, மாணவன் திடுக்கிட்டு உண்மையில் நான் படித்தேன் குருவே என்று பதிலளித்தான். எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என கூறிவிட்டு குருவை பார்த்தான் மாணவன். ஆனால் குருவோ, புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் அப்படியே இருக்கிறது, நீ என்னவோ படித்து முடித்தேன் என்கிறாய். உண்மையில் நீ படித்தால் எழுத்துக்கள் குறைந்திருக்குமே என்றாராம் குரு. 

மாணவன் இப்படி கூறியிருக்கிறார்:" குருவே, நான் படித்தது புத்தகத்தின் கருத்தை, அதை உள்வாங்கி கொண்டதால் எழுத்துக்கள் குறைய வாய்ப்பில்லையே"என்றார். இதை கேட்டு சிரித்த குரு, கடவுளுக்கு நாம் வைக்கும் நைவேத்தியம் கூட அதே மாதிரி தான். இறைவனுக்கு நாம் என்ன படைக்கிறோம் என்பதும், அது அளவில் குறைவதும் முக்கியமலை. எந்த விதத்தில் நாம் அதை படைக்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் அன்பில் படைக்கும் நைவேத்தியத்தை பிரசாதமாக நமக்கே திரும்ப அளிக்கிறார் என்றார் குரு. 

எப்படி நைவேத்தியம் படைக்க வேண்டும்? 

இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும்போது, குழந்தைக்கு அன்னம் அளிப்பதை போல நேசத்துடன், மனதார படைக்க வேண்டும். கடவுள் நாம் படைக்கும் நைவேத்தியத்தில் கலந்திருக்கும் உண்மையான பக்தி, அன்பை தான் ஏற்பார். படையலிட்ட அந்த உணவை உண்பார் என்பது பொருளல்ல. இனி குழம்ப வேண்டாம். 

இதையும் படிங்க: பூஜை ஆரத்தி தட்டில் ஏன் பணம் வைக்க வேண்டும் என்ற இந்து வழிபாட்டு பாரம்பரியம், நம்பிக்கையின் காரணம் தெரியுமா?

click me!