டிச.16 - வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் துவங்குகிறது. மார்கழி மாதம் என்பது, ஆன்மிக மாதம், பக்தி மாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியும் முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர்.
டிச.16 - வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் துவங்குகிறது. மார்கழி மாதம் என்பது, ஆன்மிக மாதம், பக்தி மாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
மார்கழி மாதம், தேவருலகின் பிரம்ம முகூர்த்த காலம் என்பார்கள். அதாவது, தேவருலகில் அதிகாலை நேரத் தொடக்கம் என்பதாகும். தை மாதம் துவங்கினால் பகல் பொழுது துவங்குகிறது என்பார்கள். எனவேதான், இப் பூவுலகில் ஆன்மிக மாதமான மார்கழியில், அதிகாலை நேரத்தில் எழுந்து, குளிர் நீரில் குளித்து ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, தமிழ் தோத்திரப் பாடல்களாம் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட தமிழ் வேதங்களைப் பாடி, இறைவனைத் தொழுது வருவது காலம் காலமாக நம் மண்ணில் இருந்து வரும் பண்பாடு.
திருவில்லிபுத்தூரில் தோன்றிய ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்களையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவை- திருப்பள்ளி எழுச்சி பாடல்களையும் வைணவ, சைவ மரபுகளின் படி முதல் நாள் தொடங்கி முப்பது நாட்களும் பாடி வணங்கி வருவது மரபு.
அந்த வகையில் நாமும் நாள் தோறும் ஒரு பாடலையும், அதன் விளக்கத்தையும் படித்து மகிழ்வோம்.
***
திருப்பாவை - 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
பாடலின் விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரம் இது. இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் ஆண்டாள்.
செல்வம் நிறைந்துள்ள திரு ஆய்ப்பாடியில், இறைவனுக்கு கைங்கரியம் செய்யக்கூடிய பெருஞ் செல்வத்தைப் பெற்ற இளம் பருவத்தை உடைய பெண்களே!
அழகான ஆபரணங்களை அணிந்தவர்களே! மாதங்களில் சிறந்த இந்த மார்கழி மாதத்தில் முழு நிலவு திகழும் நல்ல நாளாக இன்று நமக்கு வாய்த்திருக்கின்றது.
கூர்மையான வேல் ஆயுதம் கொண்டு, கண்ணனாகிய குழந்தைக்கு தீங்கு செய்வதற்காக வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழிலைப் புரிபவனான நந்தனகோபனுக்கு பிள்ளையாகப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதைப் பிராட்டிக்கு சிங்கக் குட்டியைப் போன்று திகழ்பவனும், கருமையான மேகக் கூட்டம் போலே திரண்ட மேனி அழகு பெற்றவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் சூரிய சந்திரர்களைப் போன்ற திருமுகத்தையும் உடையவனான அவனே ஸ்ரீமந் நாராயணன்.
அந்த நாராயணனே நமக்கு கைங்கரியம் என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் நின்றான். அவனாலே நாம் பேறு பெற்றோம் என்ற சிறப்பைக் கொடுக்கும்படியாக நிற்கின்றான். எனவே இந்த உலகத்தினர் கொண்டாடும்படியாக இந்த நோன்பிலே ஊன்றி, நீராட விருப்பம் கொண்டவர்களாகத் திகழும் பெண்களே! வாருங்கள். வாருங்கள்... என்று ஆண்டாள் தோழியரைத் துயிலெழுப்பி நோன்பு நோற்க அழைக்கிறாள்.
***
திருவெம்பாவை - பாடல் 1
திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது...
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாடலின் விளக்கம்:
தோழியர்: துவக்கமும் இறுதியும் இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோம்.
அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே!
உன் காதுகள் உணர்ச்சியற்றுப் போய் விட்டனவா? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து, தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள்.
அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை எம் தோழி ?!
- என்று பெண் ஒருத்தி மலர் போன்ற படுக்கையில் உறங்கிக் கிடக்கிறாள். அவளை இறைவனின் சந்நிதிக்கு வந்து வாழ்த்திப் பாட வேண்டாமா... எழுந்திரு என்று தோழி துயில் எழுப்புகிறாள்.